காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை லடாக்குடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ககான்கிர் – சோனாமார்க் இடையே அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 6.5 கி.மீ. தொலைவுக்கு வாகன சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. உ.பி.யை சேர்ந்த தனியார் நிறுவனம் இதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் தொழிலளர்கள் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மருத்துவர் மற்றும் 2 தொழிலாளர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தனர். தாக்குதலில் காயம் அடைந்த 5பேர் நகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை தப்பிக்க விடமாட்டோம். நமது பாதுகாப்புப் படைகளின் கடுமையான பதிலடியை அவர்கள் எதிர்கொள்வார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் இந்ததாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது. தீவிரவாதிகளின் இந்த அடாவடித்தனத்தால் காஷ்மீரில் கட்டுமான ஒழுங்கையும், மக்களின் நம்பிக்கையையும் ஒருபோதும் உடைக்கமுடியாது” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, “கொடூரமான மற்றும் கோழைத்தனமான இந்த தாக்குதல் பற்றி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உள்ளூர்மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.

தாக்குலில் இறந்த பிஹார் தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.