ரஷியா-உக்ரைன் விவகாரம்: தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமர் மோடி

மாஸ்கோ,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும். மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

முன்னதாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, புதினிடம் உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.