Amaran: "அந்த தருணத்துல சிவகார்த்திகேயனா பாக்கல; முகுந்த் வரதராஜனா பாத்தோம்.." – நடிகர் ஶ்ரீ குமார்

தீபாவளி வெளியீடாக `அமரன்’ திரைக்கு வருகிறது.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் அதாவது முகுந்த் வரதராஜனின் `கேட்’ குழுவில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நடித்திருக்கிறார்கள். தமிழிலிருந்து நமக்கு மிகவும் பரிச்சயமான ஶ்ரீ குமார் களமிறங்கியிருக்கிறார். அமரன் திரைப்படத்தின் புரோமோஷனுக்காக ராஜ்கமல் நிறுவனத்தினுடைய அலுவலகத்தின் அழகை ரசித்தபடியே நின்று கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

`அமரன்’ உங்க கரியர்ல எப்படியான திரைப்படமாக இருக்கும் ?

வாய்ப்புகளைக் கஷ்டப்பட்டு தேடுற கேட்டகிரி நான். நல்ல படங்கள் நல்ல கம்பெனில கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். நான் சின்ன வயசுல ராணுவத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா நான் 10-ம் வகுப்பு முடிக்காததுனால ராணுவத்துக்குப் போக முடியல. என்னுடைய அப்பாவும் `நீ வேலு மிலிட்டரிக்குதான் சரிபட்டு வருவ’னு சொல்லுவார். அந்த வேலு மிலிட்டரியும் இப்போ இல்ல ( சிரிக்கிறார்). ஆனால், எனக்குள்ள ராணுவம் மேல ஒரு ஆசை இருந்துட்டே இருந்தது. இந்த மாதிரி ஒரு படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல உருவாகப்போகுதுனு கேள்விப்பட்டதும் அவர்கிட்ட `ரங்கூன் படத்துக்குப் பிறகு எனக்கு எந்த கதாபாத்திரமும் கொடுக்கல’னு கேட்டேன். அதுக்கு அவர் `இந்த படத்துல தமிழ் ஆட்கள் ரொம்பவே குறைவுதான்’னு சொன்னாரு.

குறைவாக இருந்தாலும் பரவாயில்ல எனக்கு இந்த மாதிரியான படத்துல நான் இருக்கணும்னு சொன்னேன். அதன் பிறகுதான் அமரன் வாய்ப்பு எனக்கு கிடைச்சது. இந்த படத்தை உண்மை சம்பவத்திலிருந்து அப்படியே ராஜ்குமார் எடுத்திருக்கிறார். நாங்கள் எல்லோரும் அந்த உண்மை சம்பவத்திலிருந்த நபர்களோட கதாபாத்திரத்துலதான் நடிச்சிருக்கோம். எனக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துல இது இரண்டாவது திரைப்படம். இந்த வாய்ப்புக்காக பலரும் காத்திருக்காங்க. எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதெல்லாம் ஆசீர்வாதம்தான்.

Actor Sreekumar

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடனான முதல் சந்திப்பு எப்போ நடந்தது?

எனக்கு அவர் டெலிவிஷன்ல இருக்கும்போதே தெரியும். அதன் பிறகு அவரோட இயக்கத்துல `ரங்கூன்’ திரைப்படத்துல நடிச்சிருந்தேன். இந்த படத்தோட ஆடிஷனுக்காக அவரோட அசிஸ்டன்ட் எனக்கு கால் பண்ணினார். ஒரு சீனை அனுப்பி வசனங்களை இந்தியில பேசி நடிச்சு வீடியோ அனுப்ப சொன்னாரு. சின்ன வயசுல ஸ்கூல்ல இரண்டாவது மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்து அப்பா படிக்க சொன்னாரு. நானும் படிச்சேன். ஆனா, எனக்கு தமிழும் வரல, இந்தியும் வரல. அப்புறம் என்னுடைய சீரியல் நண்பர் ஒருவர்கிட்ட கேட்டு இந்தியில வசனங்கள் எழுதி நடிச்சேன். அதன் பிறகு மறுபடியும் ஒரு சீனுக்கு நடிச்சு அனுப்ப சொன்னாரு. நானும் அனுப்பினேன். அதையெல்லாம் பார்த்துட்டு ராஜ்குமார் `இந்தி பேச முயற்சி பண்ணியிருக்கீங்க! இந்தியை இந்தியாகவே பேசுங்க’னு சொல்லி இந்த படத்தோட வாய்ப்பு கொடுத்தார்.

காஷ்மீர் பகுதி உங்களை எப்படி வரவேற்தது ?

இங்க இருந்து காஷ்மீர் பகுதிக்கு நேரடி விமானம் கிடையாது. கனெக்ட்டிக் விமானத்துலதான் போகணும். அப்படி விமானத்தை பிடிச்சு காஷ்மீர் பகுதிக்கு போயிட்டோம். முதல் நாள் இரவுல அதிகளவிலான குளிர் இருந்தது. எனக்கு இரவு நேரத்துல தனியாக தூங்குறதுக்கு பயமாக இருக்கும். எப்போதும் இரவு நேரத்துல எனக்கு பேய் பயம் இருக்கும். எனக்கு இரண்டாவது நாள் ஷூட் கிடையாது. ஆனா, காலைல 5 மணிக்குலாம் எழுந்து இயக்குநர்கூடவே கார்ல போயிட்டேன். அப்போ அவர்கிட்ட `இரவு நேரத்துல பக்கத்துல யாரோ சவுண்ட் கொடுக்கிற மாதிரியே இருக்கு’னு சொன்னேன். அவரும் `இங்க அதிகப்படியான இறப்புகள் நடக்கிறதுனால அப்படிதான் இருக்கும்’னு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் என்னுடைய அசிஸ்டன்ட்கிட்ட ` நீ கூட மெத்தைல படுத்துக்கோ, நான் கீழ படுத்துக்கிறேன்’னு சொல்லி என் அசிஸ்டன்ட்டை கூடவே இருக்க வச்சேன். காஷ்மீர் போனதும் அங்க இருக்கிற ஆப்பிளை வாங்கி சாப்பிடணும்னு ஆசைப்பட்டேன். போனதும் உடனடியாக வாங்கி சாப்டேன். என்னையும் , சிவகார்த்திகேயன் சாரையும் இந்த படத்துல நடிச்சிருக்கிற ஒரு காஷ்மீரிகாரர் ஊர் சுத்துறதுக்கு கூடிட்டு போவார். பர்கர், சிக்கன், புலாவ் எங்க கிடைக்குதுனு தேடி போவோம். ஒரு நேரத்துல பக்கத்துலதான் இருக்குனு சொல்லி எஸ். கே சாரை நான்கு கிலோ மீட்டர் நடக்க வச்சிட்டார். ஆனா, என்னைக்கும் அவர் மேல எஸ். கே கோபப்பட்டதே இல்ல.

அமரன்

நீங்க ஆசைப்பட்ட அந்த ராணுவ உடையை போட்டதும் எப்படியான உணர்வு ஏற்பட்டது?

முதல் நாள் ஒரு போருக்கு போகிற காட்சியைதான் எடுத்தாங்க. இந்த உடையை போட்டதும் எங்களுக்கான பேட்ஜ் கொடுத்தாங்க. அப்படியே உண்மையான ராணுவ வீரர் மாதிரிதான் உணர்ந்தோம். சிவகார்த்திகேயன் சார் அந்த உடையை போட்டதும் அப்படியே முகுந்த் வரதராஜனாக மாறிட்டார். அந்த சமயத்துல நாங்க அவரை சிவகார்த்திகேயனாக பார்க்கல. மேஜர் முகுந்து வரதராஜனாகதான் பார்த்தோம்.

டெலிவிஷன்ல இருந்த சமயத்திலிருந்தே சிவகார்த்திகேயனுடன் உங்களுக்கு நட்பு இருந்திருக்கும். இப்போ பெரிய நடிகராக வந்துட்டாரு. என்னென்ன விஷயங்கள் அவர்கிட்ட நீங்க பார்த்து ஆச்சரியப்பட்டீங்க ?

அப்போ இருந்த மாதிரியே இப்போவும் இருக்காரே நினைச்சு ஆச்சரியப்பட்டேன். சீரியல்ல ஒரு நடிகர்கிட்ட பேசும்போது மரியாதைக்காக ஹலோ சொன்னால்கூட திரும்ப எதுவும் சொல்லமாட்டாங்க. ஆனால், இவர் தினமும் வந்து கட்டிபிடிச்சு மரியாதை கொடுத்தார். அந்த மரியாதையினால எனக்கு `அமரன்’ செட் முழுவதும் மரியாதை கிடைச்சது. அவரோட திறமை, உழைப்புனாலதான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கார். 15 வருஷத்துக்கு முன்னாடி எப்படி பார்த்தேனோ அப்படியே இப்போதும் இருக்காரு. அதுனாலதான் மென்மேலும் வளர்ந்துட்டே இருக்கார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.