புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் சின்னத்தையொட்டி, ஒடிசாவில் முன்னெச்சரிக்கையாக 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு டானா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுநாளை (அக். 24-ம் தேதி) ஒடிசாவின் புரி – மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஒடிசா வருவாய் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில்இருந்து மக்களை வெளியேற்றியுள்ளோம். அவர்கள் தங்குவதற்கு வசதியாக 800 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் அவர்களுக்கு உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவசர காலத்துக்குத் தேவையான மருந்துகள், மின்சார வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகளில் 500 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தங்கும் நிவாரண முகாம்களில் பெண் போலீஸாரை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறையில் இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
புயல் பாதிப்புள்ள இடங்களில் இருந்து அனைத்து மக்களையும் இடம்பெயரச் செய்யவேண்டும் என்றும், புயல் காரணமாக ஒருவர் கூட உயிரிழந்துவிடக்கூடாது என்றும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவுப்படி நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
அடுத்த 15 நாட்களுக்கு குழந்தை பிரசவிக்க இருக்கும் கர்ப்பிணிப் பெண்களின் பட்டியலையும் தயார் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கண்டறியப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். கஞ்சம், புரி, ஜெகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், மயூர்பஞ்ச், கியான்ஜார், டேன்கனல், ஜாஜ்பூர், அங்குல், குர்தா, நயாகர், கட்டா மாவட்டங்களில் 23-ம்தேதி முதல் 25-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மருத்துவச் சேவைத் துறையில் பணியாற்றும் அனைத்துடாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகவலை ஒடிசா மாநில சுகாதார சேவைத்துறை இயக்குநர் பிஜய்குமார் மொஹ பத்ரா தெரிவித்துள்ளார்.