மகன்கள் மூலம் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு? – அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது குற்றச்சாட்டு

சென்னை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனதுமகன்கள் மூலம் அரசு நிலத்தை கைப்பற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையேபிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள 4.52 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாகஅபகரித்து தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இந்த நிலங்கள் புறம்போக்கு நிலங்கள் என்று வருவாய்த்துறை பதிவேட்டில் உள்ளது. 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் சென்னை தெற்கு இணை அலுவலகம் சார் பதிவாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த நிலம், அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள் என்றும், இந்த நிலங்கள் தற்பொழுது அரசு நிலங்கள் என்றும் இந்த நில சர்வே எண்களில் எவ்விதமான பத்திரப்பதிவும் கூடாது என்றும் இதற்கு முன்பாக யாராவது செய்திருந்தால் அதை ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும்படியும் கேட்டுள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் 3 பேரும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனம் இந்த நிலத்தை அபகரிக்க 1991 முதல் 2018 வரைபல பத்திரப்பதிவுகளை செய்துள்ளது. 2015-ல் ஆலந்தூர் தாசில்தார் மேற்கண்ட சர்வே எண்ணில் உள்ள பத்திரப்பதிவை ரத்து செய்ய கூறியும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதன் சந்தை மதிப்பு ரூ.411 கோடி. அமைச்சர் ராஜகண்ணப்பனின் அழுத்தத் தினால் வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் உள்ளது. ராஜகண்ணப்பன் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே அவர், அவரது மகன்கள்மற்றும் நிலத்தை மீட்காத, சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில அபகரிப்பு செய்ததற்கான ஆதாரங்களை திரட்டி லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர், துணைமுதல்வர், தலைமைச் செயலர், வருவாய்த்துறை அமைச்சர், வருவாய்த்துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு கூறினார். இதனிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து அறப்போர் இயக்கத்துக்கு அமைச்சரின் மகன்களின் நிறுவனம் சார்பில் மறுப்பு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

‘சட்டப்படி சந்திப்பேன்’ – அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது சமூக வலை தள பதிவில், ‘மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர்கள் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.