கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வது குறித்து எதிர்காலத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்பட மாட்டாது என்றும், இந்த வார இறுதியுடன் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வரிசை முடிவடையும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..

கடவுச்சீட்டுப் பிரச்சினை கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சினை, ஏற்கனவே காணப்பட்ட விசா பிரச்சினையை அரசாங்கம் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்த்து வைத்தது. அவ்வாறே கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கும் தற்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சனிக்கிழமை 7500 கடவுச்சீட்டுக்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 23ஆம் திகதி இன்னும் 42,000 கடவுச்சீட்டுக்கள் இலங்கைக்கு கிடைக்க உள்ளன. எனவே மக்கள் அவசரப்பட்டு கடவுச்சீட்டுகளை எடுப்பதற்காக ஓடி வரவேண்டிய அவசியம் இலலை. நவம்பர் மாத மத்தியில் மேலும் ஒரு இலட்சம் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்யவுள்ளோம்.

அதனால் மக்கள் அவசரத்திற்கு கடவுச்சீட்டுகளை எடுப்பதற்கு அழைய வேண்டியதில்லை. இவை மீண்டும் முடிவடையலாம் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். அச்சமடைய வேண்டியதில்லை. 750,000 கடவுச்சீட்டுக்கள் கட்டம் கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்படும். எனவே இந்த கடவுச்சீட்டுப் பிரச்சினையை இன்னும் 27 அல்லது 28 நாட்களில் நாம் தீர்த்து வைப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.