India vs New Zealand Pune Test: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் நாளை (அக். 24) தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி (Team India) டெஸ்டில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாக இது பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்டானது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும் முதல் இன்னிங்ஸில் அடைந்த பின்னடைவை இந்தியா அணி இரண்டாம் இன்னிங்கில் ஓரளவுக்கு சரிகட்டியது என்றாலும் அது போதிய அளவிற்கு கைக்கொடுக்கவில்லை. எனவே, ரோஹித் சர்மா அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்தை (Team New Zealand) சமாளிக்க என்னென்ன வியூகங்களை வகுக்கப்போகிறார், தனது வியூகத்திற்கு யார் யாரை பயன்படுத்தப்போகிறார் என்ற ஆர்வம் தற்போது அதிகமாகி உள்ளது.
கவலையில் இந்திய அணி ரசிகர்கள்
இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி முதல் போட்டியை இழந்திருந்தது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற ரீதியில் வென்றது. எனவே, இந்த தொடரையும் இந்தியா 2-1 என்ற ரீதியில் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுவும் கம்பீர் (Gautam Gambhir) வந்த பின்னர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போதுதான் பெரியளவில் அழுத்தத்தை சந்திக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக ஏற்கெனவே ஓடிஐ தொடரை இந்தியா இழந்திருந்தாலும், டெஸ்டில் அதுவும் சொந்த மண்ணிப்பில் சொதப்புவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கவில்லை. அதாவது இன்த 11 ஆண்டுகளில் சுமார் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 போட்டிகளில் இந்தியாவே வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவாகி உள்ளன, 5 போட்டிகளில் தோல்வியைடந்துள்ளது. எனவே இந்த மைல்கல் இத்தோடு முடிவுக்கு வரக்கூடாது என்பதும் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இதனால், இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் (IND vs NZ Playing XI) மீண்டும் ஒருமுறை சொதப்பக்கூடாது என்றும் கேஎல் ராகுல் (KL Rahul) இடத்தை சர்ஃபராஸ் கானுக்குதான் கொடுக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
சுப்மான் கில் உடற்தகுதி
கடந்த டெஸ்ட் போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மான் கில் (Shubman Gill) விளையாடவில்லை. இந்நிலையில், புனே டெஸ்ட் போட்டிக்கு அவர் மீண்டும் சேர்க்கப்படுவாரா அல்லது அவருக்கு பதில் கடந்த போட்டியை போலவே கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) விளையாடுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில், கௌதம் கம்பீர் நாளை போட்டியை முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில்,”கடைசி ஆட்டத்தில் கில் காயம் அடைந்தார். காயம் காரணமாக, அவரால் விளையாட முடியவில்லை, ஆனால் அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். களத்திற்கு சென்று வெற்றி பெறுவதற்கு யாரால் முடியுமோ அவர்களை நாளைக்கு நாங்கள் தேர்வு செய்வோம்” என கூறினார்.
கேஎல் ராகுல் உறுதி…
சமூக வலைதளத்தில் கருத்து கூறும் நெட்டிசன்களும், வல்லுநர்களும் இந்திய பிளேயிங் லெவனில் தாக்கம் செலுத்த மாட்டார்கள் என்றும் கம்பீர் உறுதிபட தெரிவித்துள்லார். வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாகவே விளையாடினார் என்றும் அவர் இந்திய அணிக்காக ரன்களை குவிக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார் என்றும் கம்பீர் கூறினார். இதனால் கேஎல் ராகுல் நாளைய பிளேயிங் அணியில் விளையாடுவது ஏறத்தாழ உறுதி. எனவே, சர்ஃபராஸ் கான் நீக்கப்படுவாரா அல்லது காயத்தால் மீண்டும் சுப்மான் கில் அமரவைக்கப்படுவாரா என்பது கேள்வியாக உள்ளது.