ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில்..

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எம். எம். பத்மலால் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

2024ஆம் ஆண்டில் 50வது பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம்;, ஆரம்பத்தில் இப்பல்கலைக்கழகம் பல்கலைகழகமாக அன்றி பிரிவேனாவாகவே ஆரம்பிக்கப்பட்டது. இந்த பிரிவேனா 1959 ஆம் ஆண்டு வித்தியோதயா பல்கலைக்கழகமாக மாறியது.

மேலும், 1959 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வித்தியோதயா பல்கலைக்கழகம் 05 பீடங்களுடனும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு வித்தியோதயா பல்கலைக்கழகம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமாக மாறியது. இவ்வளவு நீண்ட பயணத்தை கடந்து வந்துள்ள பல்கலைக்கழகம் இன்று 11 பீடங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்;.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் 50க்கும் குறைவான மாணவர்களே பட்டம் பெற்றனர், தற்போது 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50ஆவது பட்டமளிப்பு விழாவில் 3,999 இளங்கலைப் பட்டதாரிகள் பட்டம் பெறவுள்ளனர்.

உள்ளகப் பொதுப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மேலதிகமாக முதுகலைப் பட்டதாரிகளும் இங்கு தங்களுடைய பட்டங்களைப் பெற உள்ளனர். தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகமாக இப்பல்கலைக் கழகம் காணப்படுவதாகவும்; உபவேந்தர் குறிப்பிட்டார்.

அத்துடன், இங்கு 16,800 க்கும் மேற்பட்ட உள்ளக மாணவர்கள் கல்வி கற்கின்றனர். சுமார் 3,500 மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்கின்றனர். இப் பல்கலைக்கழகத்தில் 86 துறைகள் காணப்படுகின்றன, 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர், 04 புதிய பீடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, கணினி அறிவியல் பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் என்பன அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.