அமராவதி: தீபாவளி முதல் ஆந்திராவில் ஏழை பெண்களுக்கு, ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஆந்திர அமைச்சரவை கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ளது.
அமராவதியில் இன்று (அக்.23) ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதன தொடர்ந்து, இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அமைச்சர் நாதள்ள மனோகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆந்திராவில் கூட்டணி அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தற்போதைய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்களுக்கு ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டுக்கு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை பெண்களுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் வரும் தீபாவளி முதல் அமல் படுத்த தீர்மானிக்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டர் தொகையை செலுத்தி காஸ் சிலிண்டர் பெற்றுகொண்ட பின்னர், 48 மணி நேரத்திற்குள் அந்த தொகை மீண்டும் அவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இப்படியாக ஒரு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடி பாரம் விழும்.
இதேபோன்று, தேர்தல் வாக்குறுதிப்படி, ஆந்திரா முழுவதும் இலவச மணல் விநியோகம் செய்யவும் இந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஜிஎஸ்டி கூட செலுத்த தேவையில்லை. மணல் இல்லாத மாவட்டங்களில் ஏஜென்சிக்கள் மூலம் குறைந்த வாடகைக்கு மணல் விநியோகம் செய்யப்படும். பட்டா நிலங்களில் அவரவர் சொந்த மணலை அவர்களே எடுத்து கொள்ளலாம். இத்திட்டத்தை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மேற்பார்வையிட வேண்டும்.
கோயில் கமிட்டிக்களில் கண்டிப்பாக பிராமணர் மற்றும் நாவித கலைஞர் இடம்பெற வேண்டும். இதற்கான அரசாணை திருத்தத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விசாகப்பட்டினம் சாரதா பீடத்துக்கு கடந்த ஜெகன் ஆட்சியில் இலவசமாக அளித்த 15 ஏக்கர் நிலத்தை வாபஸ் பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏக்கர் ஒரு கோடி வரை மார்க்கெட் விலை உள்ள அந்த இடத்தை, ஜெகன் அரசு ஏக்கர் ஒரு லட்சத்துக்கும் மிக குறைந்த விலைக்கு சாரதா பீடத்துக்கு கொடுத்தது. இதனால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.