சீன அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: எல்லைப் பிரச்சினையை பிரதிநிதிகள் விரைவில் விவாதிக்க சம்மதம்

கசான்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.23) கசானில் நடைபெற்ற 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே சீன மக்கள் குடியரசின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் 2020-ம் ஆண்டில் எழுந்த பிரச்சனைகளுக்கு தீர்வு, படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி, வேறுபாடுகள் மற்றும் மோதல்களை முறையாக கையாள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.

எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிர்வகிப்பதை மேற்பார்வையிடவும், எல்லைப் பிரச்சனைக்கு நியாயமான, பொறுப்புமிக்க மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியவும், இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனைக்கான சிறப்புப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்தவும், மீண்டும் கட்டியமைக்கவும் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் இதர அதிகாரிகள் நிலையிலான பொருத்தமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டு அண்டை நாடுகள் மற்றும் உலகின் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியா, சீனா இடையேயான நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் இணக்கமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர்.

இருதரப்பு உறவுகளை திட்டமிட்ட மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். உத்தி சார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பைக் கண்டறிய வேண்டும் என்றும் தலைவர்கள் உறுதிபூண்டனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவும் சீனாவும் தங்களது தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் சீன அதிபர் ஜின்பிங் கூறினார் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் முக்கியத்துவம்: கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இதன்பிறகு இரு நாடுகளிடையே போர் பதற்றம் எழுந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எல்லையில் போர் பதற்றம் தணிந்தது. இதன்பிறகு கடந்த 2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். ஆனால், இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்தச் சூழலில், ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். இதற்கு முன்பாக லடாக் எல்லையில் சுமுகமாக ரோந்து பணியை மேற்கொள்ள இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு நாடுகளின் எல்லையில் 4 ஆண்டுகள் நீடித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாரபூர்வமாக சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.