இந்தியாவின் கதையை முடிக்க காத்திருக்கும் இந்த 4 பேர்… நியூசிலாந்தின் பலே பிளான் – என்ன தெரியுமா?

India vs New Zealand 2nd Test Latest Updates: இந்திய அணி தற்போது 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் புள்ளிப்பட்டியில் முதலிடம் வகிக்கிறது. அதேபோல், கடந்த 11 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் கோட்டையில் ராஜாவாக வலம்வந்த இந்தியாவுக்கு தற்போது பெரும் நெருக்கடி உண்டாகியிருக்கிறது. இரண்டு போட்டியையும் வென்றாக வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

மறுபுறம் நியூசிலாந்து அணிக்கு (Team New Zealand) முதல் போட்டியில் கிடைத்த வரலாற்று வெற்றியுடன், அதைவிட பிரம்மாண்டமான சாதனை ஒன்றும் காத்திருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் யார் யார் தங்களின் மகுடத்தை சூடிக்கொள்ளப்போகிறார்கள் என்பது உறுதியாகிவிடும். நியூசிலாந்து அணி இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில்தான் வென்றுள்ளது. ஒருமுறை கூட இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி, பலம்வாய்ந்த அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்தே டெஸ்ட் தொடரை வென்றால் அது பெரிய ஊக்கமாக அமையும்.

ரோஹித் & கோ போடும் திட்டம்

நியூசிலாந்து அணி அனைத்திற்கும் தயாராகியே வந்துள்ளது. இலங்கையில் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த நியூசிலாந்து உடனடியாக கேப்டனை மாற்றியது. டிம் சௌதி தானாக விலகினார். பொறுப்பு டாம் லேதம் தோள்களுக்கு தானாக போனது. அதிகாரப்பூர்வ கேப்டனாக முதல் போட்டியிலேயே டாம் லேதம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நியூசிலாந்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த அணியும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த அணி குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளில் 1 போட்டியாவது வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது.

இதனை தடுக்க இந்திய அணி (Team India) பல முயற்சிகளை எடுக்கும். அதில் முதல் விஷயம் நாளை புனே மாகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கொடுக்கப்படப்போகும் ஆடுகளம் எனலாம். இது மெதுவான மற்றும் சுழலுக்கு மிகுந்த சாதகத்தை அளிக்கும் ஆடுகளமாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் நியூசிலாந்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி தனது பலமான சுழற்பந்துவீச்சு கூட்டணி வெற்றியை ருசித்துவிட ரோஹித் & கோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதற்கும் நியூசிலாந்து தயாராக வந்துள்ளதாகவே தெரிகிறது.

மிரட்டப்போகும் 4 ஸ்பின்னர்கள்

இதுகுறித்து இரண்டாவது போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் (Tom Latham),”எங்களுக்கு எதைக் கொடுத்தாலும், அது எங்களால் முடிந்தவரை விரைவாக அதற்கு ஏற்றது போல மாற முயற்சிப்போம். இன்னும் கொஞ்சம் நன்றாக திரும்பும் ஆடுகளமாக இருக்கப் போகிறது என்றால், எங்களிடம் நான்கு ஸ்பின்னர்கள் உள்ளனர். இருந்தாலும் எவ்வித முன்தீர்மானங்களும் இன்றி நாங்கள் போட்டியை அணுக திட்டமிட்டுள்ளோம். பெங்களூருவில் இருந்ததை விட ஆடுகளம் வேறுபட்டதாக இருக்கும், நாங்கள் உண்மையில் ஆடுகளத்திற்கு ஏற்ப மாற வேண்டும் விரைவாக…” என்றார். 

அஜாஸ் பட்டேல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி ஆகிய மூன்று பேர் ப்ரீமியம் ஸ்பின்னர்களாக நியூசிலாந்தில் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிளிப்ஸ் ஆகியோர் பகுதிநேரமாக சுழற்பந்துவீச்சை வீசக்கூடியவர்கள் ஆவர். ஒருவேளை ஆடுகளம் சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கும்பட்சத்தில் கடந்த போட்டியில் விளையாடிய ஒரு வேகப்பந்துவீச்சாளரை தூக்கிவிட்டு கூட ஒரு ஸ்பின்னரை உள்ளே கொண்டு வரும் வாய்ப்புள்ளது. 

ஞாபகம் இருக்கா…?

மும்பை வான்கடேவில் நியூசிலாந்து அணியை சேர்ந்த அஜாஸ் பட்டேல் கடந்த 2021-22 சுற்றுப்பயணத்தின்போது ஒரே இன்னிங்ஸில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் சுருட்டி சாதனை படைத்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் கூட இந்திய பேட்டர்கள் சுழலுக்கு எதிராக, அதுவும் நன்கு திரும்பும் ஆடுகளங்களில் தடுமாற்றம் அடைவதை கடந்த சில ஆண்டுகளாகவே பார்க்க முடிகிறது. எனவே, தன்வினை தன்னைச் சுடும் என்பது போன்று தான் விரித்த வலையில் தானே சிக்கிக்கொள்ளாமல் இந்தியா தப்பிக்கவும் வேண்டும். 

மேலும் படிக்க | IND vs NZ: 2வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? வெளியான முக்கிய தகவல்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.