லக்னோ: பள்ளி ஒன்றில் சிறுமிகளுக்கு அவர்களுக்கு தெரியாமலேயே பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘குட் டச், பேட் டச்’ விழிப்புணர்வின் மூலம் மற்றொரு ஆசிரியர் இதனை கண்டுபிடித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ‘நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? என்பது குறித்து விளக்கியுள்ளார். கெட்ட தொடுதல் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் மாணவிகளிடம் ‘அப்படி யாரேனும் உங்களை தொட்டிருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார்.
அப்போது மாணவிகள் அனைவரும் அருகில் இருந்த மற்றொரு ஆசிரியரை கைகாட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரித்ததில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் தொடர்ந்து நீண்டநாட்களாக சிறுமிகளிடத்தில் அவர்களுக்கு தெரியாமலேயே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இந்த தகவல் உடனடியாக காட்டுத் தீ போல பரவியதும் குழந்தைகளின் பெற்றோர் பலரும் அருகில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக அந்த ஆசிரியரை கைது செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிறுவயது முதலே நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் வேளையில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் அதன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.