ஒட்டாவா: இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்க வேண்டும் என்று, கனடாவிலுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் (என்டிபி) எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தமுடிவு செய்துள்ளதாகவும் கனடா தெரிவித்தது. இதையடுத்து இந்தியதூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்தது.
இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. எனவே, கனடாவில் அதைத் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை கனடா அரசு விதிக்கவேண்டும். சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று கனடாவிலுள்ள ராயல் கனடிய மவுண்டட் போலீஸ் (ஆர்சிஎம்பி) குற்றம் சாட்டியுள்ளதன் மூலம் இதில் இந்தியாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்டு புதிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பேசினர். அப்போது அந்த எம்.பி.க்கள் கூறும்போது, “இந்தியாவிலுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. அதை கனடாவில் தடை செய்யவேண்டும். மேலும் இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கைகள் வருகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். மேலும் தங்கள் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஓட்டல்களில் தங்கி பாதுகாப்புடன் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.
என்டிபி கட்சி எம்.பி. ஹீத்தர் மெக்பெர்சன் கூறும்போது, “இந்தியாவுக்கு ஆயுதங்கள், ராணுவத்தளவாடங்கள் விற்பனை செய்வதை கனடா நிறுத்தவேண்டும். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறை, இனப்படுகொலை வன்முறைக்கு அழைப்பு விடுக்கும், இந்தியாவைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் கனடா வருவதற்கு தடை செய்யவேண்டும். இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும்” என்றார். அவையில் என்டிபி கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் அமைப்பானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வன்முறை, தீவிரவாத அமைப்பு போன்று செயல்படுகிறது. கனடாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும்’’ என்றார்.