ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கும் குடும்பங்கள்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இதுவரை இல்லாத அளவில் தம்குடும்பத்தினரையும் வாரிசுகளையும் களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இங்கு முக்கிய போட்டியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் இண்டியா கூட்டணிகள் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளும், குடும்பத்தினரும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றனர். இதில் முக்கியமாக வாரிசுஅரசியலை கடுமையாக விமர்சிக்கும் பாஜக.விலும் இந்த பிரச்சினை தொடங்கி விட்டது. ஜார்க்கண்ட் பாஜக முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸின் மருமகள் பூர்ணிமா சாஹுவுக்கு ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்த தொகுதியில் பூர்ணிமாவின் வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரகுவர் தாஸ், ஒடிசா ஆளுநராக உள்ளார்.

ஜார்க்கண்டின் மற்றொரு முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான அர்ஜுன் முண்டாவின் மனைவி மீராமுண்டாவுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. மத்திய அமைச்சராக இருக்கும் அர்ஜுன் முண்டாவுக்கு சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் அதிக செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி மீரா போட்டியிடும் போட்கா தொகுதியில் வெல்வது நிச்சயம் எனக் கருதப்படுகிறது.

சுயேச்சை எம்எல்ஏ.வாக இருந்து ஜார்க்கண்ட் முதல்வரானவர் மதுகோடா. தற்போது பாஜக.வில் இணைந்துள்ள மதுகோடாவின் மனைவி கீதா கோடாவுக்கு ஜெகந்தாத்பூர் தொகுதியில்போட்டியிட வாய்ப்பு கிடைத் துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனின் மைத்துனி சீதா சோரன். இவர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக.வில் இணைந்தவர். தும்கா மக்களவை தொகுதியில் போட்டியிட்டவர் சிபுசோரனிடம் தோல்வி அடைந்தார்.

எனவே, சீதாவுக்கு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் ஜம்தாரா தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சம்பத் சோரனின் மகன் பாபுலால் சோரனும் பாஜக சார்பில் கட்ஷிலா தொகுதியில் போட்டியிடுகிறார். ஹேமந்த் சோரன்கைதாகி சிறைசென்ற போது சம்பய் சோரன் தற்காலிக முதல்வராக இருந்தவர். மீண்டும் ஹேமந்த் முதல்வரான உடன் அதிருப்தி அடைந்து பாஜகவில் இணைந்தார்.

இதேபோல், பாஜக கூட்டணியான அனைத்து மாணவர் சங்க கட்சி தலைவர் சந்திர பிரகாஷ் சவுத்ரி எம்.பி.யின் மனைவி சுனிதா சவுத்ரி, அக்கட்சிக்காக ராம்கரில் போட்டியிடுகிறார். சந்திர பிரகாஷின் சகோதரர் ரோஷன் லால் சவுத்ரி பர்காகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஆளும் கட்சியில், முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் வசந்த் சோரன், ஜேஎம்எம் சார்பில் தும்காவில் போட்டியிடுகிறார். முதல்வர் ஹேமந்த் சிறையிலிருந்த போது அவரது மனைவியான கல்பனா முர்மு சோரன், ஜார்க்கண்ட் காந்தே தொகுதி இடைத்தேர்தலில் வென்று எம்எல்ஏ.வாகி விட்டார். ஹேமந்தின் தந்தையும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் எம்.பி.யாக உள்ளார். தொடர்ந்து மேலும் வெளியாக உள்ள வேட்பாளர்கள் பட்டியலிலும் பல குடும்பத்தினரும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.