பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது, அங்கே பயன்படுத்தப்படும் வார்த்தைகளையும் தெரிந்துகொள்வோம்… வாங்க!
பங்குச்சந்தை டைமிங்: பங்குச்சந்தை வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரைதான் இயங்கும். வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை. மேலும் அரசு விடுமுறைகளின் போது விடுமுறையாகத் தான் இருக்கும். பங்குச்சந்தை டைமிங் காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை.
CAGR: Compound Annual Growth Rate-ன் சுருக்கமே CAGR. ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஆண்டிற்கு எத்தனை சதவிகித வளர்ச்சியை முதலீடு எட்டியிருக்கிறது என்பது தான் CAGR. நீங்கள் ரூ.100 முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலாம் ஆண்டு 10 சதவிகித வளர்ச்சியை எட்டியிருக்கலாம். இரண்டாவது ஆண்டு 8 சதவிகித வளர்ச்சியை எட்டியிருக்கலாம் – இப்படி ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியில் சதவிகித மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், இதை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு அடிப்படை சதவிகிதம் வந்திருக்கும். அது தான் CAGR.
ஸ்குயர் ஆஃப் (Square off): இன்ட்ரா டே டிரேடிங் மற்றும் ஷார்ட் செல்லிங்கில் இந்த வார்த்தை பயன்படும். வாங்கிய பங்கை விற்பது தான் ஸ்குயரிங் ஆஃப்.
இன்னொரு பக்கம், இன்ட்ரா டே டிரேடிங்கில் பங்குகளை வாங்கிவிட்டு, அதே நாளில் விற்காமல் விட்டுவிடலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாம் டிரேடிங்கை தொடங்கும்போதே, இன்ட்ரா டே டிரேடிங் என்று தான் தேர்வு செய்திருப்போம். அதன்படி, நாம் பங்குகளை விற்காமல் போய்விட்டால், பிரோக்கர்கள் தானாக அந்தப் பங்குகள் விற்க ஆட்டோ ஸ்குயரிங் நேரம் கொடுத்திருப்பார்கள். அதனால், அப்போது அந்தப் பங்கு தானாகவே விற்றுவிடும். இதே தான் ஷார்ட் செல்லிங்கிலும் நடக்கும். ஷார்ட் செல்லிங்கும் ஒரே நாளில் தான் நடக்கும். அதனால் அங்கும் ஸ்குயர் ஆஃப் மற்றும் ஆட்டோ ஸ்குயர் ஆஃப் இருக்கும்.
ஸ்டாப் லாஸ்: நாம் வங்கிய பங்கு ஒரு விலையை தொட்டவுடன் குறையலாம் அல்லது நாம் வாங்கிய விலையை விட பங்கின் விலை குறையும். அதனால், அதை நாம் முன்பே கணித்து, ஸ்டாப் லாஸ் கொடுத்துவிட்டால், நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கும் தொகை எட்டும்போது, அது தானாகவே பிரோக்கரால் விற்பனைக்கு எடுக்கப்பட்டு விடும்.
T: பரிவர்த்தனை நடக்கும் நாள்.
T+1: பரிவர்த்தனை மேற்கொண்டதற்கு அடுத்த நாள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு பங்கை விற்றால், அது உடனே நமது கணக்கில் இருந்து சென்றுவிடும். ஆனால், பங்கு வாங்கினால் T தினத்திற்கு அடுத்த நாள் T+1-ல் தான் உங்கள் கணக்கில் வந்து பங்கு சேரும்.
நாளை: போர்ட்ஃபோலியோ, ஃபேஸ் வேல்யூ – இன்னும் சில…