சென்னை: அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ம் தேதி அரை நிர்வாண போராட்டம் நடத்துவது என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் தலைமையில் சென்னையில் இன்று (அக்.24) நடைபெற்றது. இதில், சங்க பொதுச்செயலாளர் என்.லோகநாதன், துணை பொதுச்செயலாளர் ஏ.அப்துல் அஜீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 106 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும்.
அரசுத் துறை ஓய்வூதியர்களைப் போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். 2003-ம் ஆண்டுக்கு ஏப்.1-ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தும் வகையில் டிச.17-ம் தேதி 30 ஆயிரம் பேர் பங்குபெறும் வகையில் சென்னையில் அரை நிர்வாண போராட்டம் நடைபெறும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.