வாணி ராணி’, ‘அழகு’ முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை சாரா என்ற ஜெனிப்ரியா. ‘ராஜ மன்னார் வகையறா’ தொடரில் லீட் ரோலில் நடித்தார். பிறகு சினிமா முயற்சியில் இறங்கினார். ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின், சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ தொடங்கி செலிபிரிட்டி மேக் -அப், மற்றும் மேக்-அப் பயிற்சி வகுப்புகள் என வேறொரு திசையில் கவனம் செலுத்தினார்.
சில வருடங்களுக்கு முன் ‘பிக் பாஸ்’ ஜூலியின் விதவிதமான போட்டோஷூட் வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அந்த மேக்-அப் எல்லாம் இவர் கைவண்ணம்தான்.
இவருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த துநேசன் என்பவருக்கும் திருமணம் உறுதியாகி, சில தினங்களுக்கு முன் சென்னையில் நலங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமணம், வரவேற்பு இரண்டுமே சிங்கப்பூரில் வரும் நவம்பர் 8 மற்றும் 11 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஜெனிப்ரியாவுக்கு நெருக்கமான சில டிவி நட்சத்திரங்கள் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விமான டிக்கெட் கூட போட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜெனிப்ரியா, தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், துநேசன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டதாகவும், தன்னுடைய நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் கூறுகிறார்.
ப்ரீ வெட்டிங் ஷூட்டெல்லாம் கூட முடிந்து விட்ட நிலையில், என்ன நடந்தது என அவரிடமே கேட்டோம்.
”திட்டமிட்டு என்னை ஏமாத்திருக்குது துநேசன் குடும்பம். மேட்ரிமோனி மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். அந்த டாகுமென்ட்ஸ்னு சில பேப்பர்களைக் காமிச்சார். ரெண்டு பையன்களுடன் கஷ்டப்படுகிறவர்னதும் எனக்கு அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உருவாச்சு. அப்பக்கூட வரதட்சனையா இருநூறு சவரன் வரைக் கேட்டாங்க. என்னால நூறு வரைக்கும் போட முடியும் சொன்னேன். அதுக்குச் சம்மதிக்கவே கல்யாண ஏற்பாடு நடந்துச்சு.
நலுங்கு நிகழ்ச்சி செப்டம்பர 26 ம் தேதி சென்னையில் சிம்பிளா நடந்திச்சு. கல்யாணம் நவம்பர்ல நடக்கறதா இன்விடேஷன்லாம் அடிச்சு எல்லாருக்கும் கொடுத்திருந்தேன்.
நலுங்கு முடிஞ்சதும் சிங்கப்பூர் கிளம்புச்சு அவருடைய குடும்பம். அப்பவே நூறு சவரன் நகைகளைக் கேட்டாங்க. மேரேஜ் முடிஞ்சதும் எடுத்துட்டுப் போகலாம்னு சொன்னதுக்கு, அப்ப நீங்க கொண்டு வந்தா, ஏர்போர்ட்ல கஸ்டம்ஸ் செக்-அப் முதலான விஷயங்களின் போது ஏதாவது பிரச்னை வரலாம். நான் பைலட்ங்கிறதால நான் கொண்டு போனா எந்தப் பிரச்னையும் வராதுன்னு சொன்னார். அதை நம்பி ஐம்பது சவரன் நகைகளை மட்டும் கொடுத்தேன்
அடுத்த சில தினங்கள்ல கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீவெட்டிங் ஷூட்டுக்காக நான் கிளம்பி சிங்கப்பூர் போனேன். அங்க போன பிறகே இவர் பத்தி நிறைய அதிர்ச்சித் தகவல்கள் எனக்குத் தெரிய வந்துச்சு.
அவர் சொந்தக்காரங்கன்னு யார் வீட்டுக்கெல்லாம் என்னைக் கூட்டிட்டுப் போனாரோ அவங்களேதான் அந்தத் தகவல்களைச் சொன்னாங்க. அதாவது இவருடைய முதல் மனைவியை இவரேதான் துரத்தி விட்டிருக்கார்னு தெரிஞ்சது. அவருடைய மூத்த பையனுடைய நடவடிக்கையுமே வித்தியாசமா இருந்தது. ஃபோன். கேம்க்கு அடிமையாகி இருக்கான் அவன். ‘பையன் அப்படிதான் இருப்பான்; அது பத்தியெல்லாம் நீ கேக்கக் கூடாது’னு சொன்னார். அதைக்கூட விட்டுட்டேன்.
ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் முடிஞ்சு சென்னை திரும்பின பிறகு அவர்கிட்ட இருந்து போனே வரல. நான் பேசலாம்னாலும் லைன்ல பிடிக்க முடியலை. ‘சரி, இனி இந்தக் கல்யானம் செட் ஆகாதுன்னு நினைச்சு எனக்கு அங்க இருந்த வேற சில நண்பர்கள் மூலமா அவர்கிட்டப் பேசினப்ப, ‘வந்து என்னுடைய பொருட்களை வாங்கிட்டுப் போகச் சொன்னார். சரின்னு திரும்பவும் கிளம்பி போனேன்.
ஆனா அப்ப அவர் வீட்டுக்குள்ள கூட என்னை விடல. வெளியில நிக்க வச்சே என்னுடைய துணிமணிகள் மத்த சில பொருட்களை மட்டும் தந்தாங்க. அப்பக்கூட அவர் வீட்டுல இல்லைன்னு சொல்லி, அவருடைய தம்பி, அம்மாதான் கொண்டு வந்து தந்தாங்க. என் நகைகளைக் கேட்டதுக்கு, ‘நகையெல்லாம் நீ எதுவுமே தரல’ன்னு ஒரு பெரிய அதிர்ச்சியைத் தந்தாங்க.
இதுக்கு முன்னாடி கூட நான் வாழ்க்கையில ஏமாந்திருக்கேன். ஆனா இப்பதான் முதல் தடவையா இப்படியொரு அதிர்ச்சி. அந்த ஊர்ல இருந்து நான் என்ன செய்யனு தெரியலை. அதனால உடனே சென்னை வந்துட்டேன்.
இங்க வந்ததுமே வக்கீல்களை கன்சல்ட் செய்து அவர் வேலை பார்க்கற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு ஒரு மெயில் போட்டிருக்கேன். நகைகளை நான் கொடுத்ததற்கு போன் சாட்டிங், அவர் தங்கியிருந்த ஹோட்டல் வீடியோ ஃபுட்டேஜ்னு சில சாட்சிகள் தான் இருக்கு. இதை வச்சு அவர் மீது புகார் தர்றது பத்தி யோசிச்சிட்டிருக்கேன்” என்கிறார் ஜெனிப்ரியா