வடலூர்: அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை. `வள்ளலாரின் கருத்துகளை பரவலாக்கும் விதமாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்’ என்று, 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் ஆட்சிக்கு வந்ததும் அதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.99.90 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அந்த கட்டுமானங்களுக்காக சத்திய ஞானசபை வளாகத்தில் இருக்கும் பெருவெளி தேர்வு செய்யப்பட்டது.

சத்திய ஞான சபை

சத்திய ஞானசபை, தர்ம சாலை, அருட்பெருஞ்சோதி மண்டபம் தவிர்த்து, மீதமிருக்கும் திறந்தவெளியே `பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. `அருட்பெருஞ்சோதியை தரிசிப்பதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடும் இடமான பெருவெளியில், சர்வதேச மையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

வடலூரிலேயே வேறு ஒரு இடத்தில் அதை அமைக்க வேண்டும்’ என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன், சீமான் போன்றவர்களும், சன்மார்க்க அன்பர்களில் ஒரு தரப்பினரும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திட்டமிட்டபடி பிப்ரவரி 17 அன்று, காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதும், சர்வதேச மையத்திற்கான பணிகள் தொடங்கியது. அப்போது சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்த பார்வதிபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

வள்ளலார் சர்வதேச மையம்

அதன் தொடர்ச்சியாக, பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், கடந்த 10-ம் தேதி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், `வடலூர் பெருவெளியில் எந்த கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று, வள்ளலார் திருமறைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பக்தர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டது.  அதையடுத்துப் பேசிய நீதிபதிகள், “வள்ளலார் தன்னுடைய பாடலில் பெருவெளியில் கட்டடங்கள் அமையக் கூடாது என்று குறிப்பிடவில்லை. வள்ளலாரின் பாடல்களை தவறான பொருள்களில் புரிந்து கொண்டு, அதை பரப்பி அவரின் புகழைக் கெடுக்க வேண்டாம். அரசு அமைக்க இருக்கும் மையத்தால், சத்திய ஞானசபைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அரசின் திட்டம் வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்று நிரூபித்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.

மேலும் வள்ளலார் கூறிய 106 ஏக்கர் பெருவெளியில், 71 ஏக்கர் மட்டுமே தற்போது இருக்கிறது. மீதமுள்ள நிலங்கள் சத்திய ஞானசபையை சுற்றியிருக்கும் 400 கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆக்கிரமிப்புகளில் இருந்து பெருவெளியை மீட்க வேண்டும். மேலும், சர்வதேச மையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியது யார் என்பதற்கான அனுமதி கடிதத்தையும், சமர்ப்பிக்க வேண்டும். அரசு கட்டடம் என்றால் அனுமதி வாங்கக் கூடாதா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, `அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே சர்வதேச மையம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்’ என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து சத்திய ஞான சபை வளாகத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு நிலங்கள் யார் யார் பெயரில் இருக்கிறது என்ற பட்டியலை தாக்கல் செய்திருந்தார் கடலூர் மாவட்ட ஆட்சியர். இந்த வழக்கு கடந்த 10-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, `வள்ளலார் சர்வதேச மையத்திற்காக, பெருவெளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடத்தில் முதியோர் இல்லம் மற்றும் சித்த மருத்துவமனை கட்டும் பணியை துவங்கலாம்.

அதேநேரம் மறு உத்தரவு வரும் வரை, பெருவெளியில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. அதனடிப்படையில் தற்போது சர்வதேச மையத்திற்கான கட்டுமானப் பணிகளை துவங்கியிருக்கிறது அரசு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.