புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை ‘டானா’ தீவிரப் புயல் கரை கடக்கிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் அதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (அக்.23) நிலைகொண்டிருந்த டானா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுபெற்றது. மேலும், இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.24) காலை 8.30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரதீப்புக்கு (ஒடிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒடிசா) தெற்கு – தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒடிசா) அருகே மிகத்தீவிர புயலாக, 25-ம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில், அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: ஒடிசா கடல் பகுதியை டானா புயல் நெருங்கியதால் பாரதீப் பகுதி, கேந்திரபாரா மாவட்டத்தின் ராஜ்நகர், பாலசூர், புரி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுக்கு பல மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக, ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது பத்ரக், பாலசூர், ஜஜ்பூர், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபடா மற்றும் புரி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரை கடந்தபின் மேற்கு மற்றும் தென் பகுதி நோக்கி திரும்பும் வாய்ப்புள்ளதால் தெற்கு ஒடிசா பகுதியில் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர் வெளியேற்றம்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் கூறுகையில், “டானா புயல் காரணமாக ஒடிசாவின் 3 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளது. 14 மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் பேரை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டானா புயலை எதிர்கொள் ஒடிசா அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் பாதிப்பை சமாளிக்க மாநில அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.இதனிடையே, ஒடிசாவின் புரியில் உள்ள 12-ம் நூற்றாண்டு ஜெகன்நாதர் கோயிலை டானா புயல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்கு வங்கத்திலும் உஷார் நிலை: மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் வாழும் 3.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் மீட்புப் படையினர்: பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘டானா புயல் ஏற்படுத்தக் கூடிய கடுமையான தாக்கத்தை சமாளிக்க, இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கிழக்கு கடற்படை தலைமையகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விரிவான பேரிடர் மீட்பு செயல்முறையை வகுத்துள்ளது.
மாநில நிர்வாகங்கள் கோரினால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை வழங்கவும் கடற்படை தயாராக உள்ளது. கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ் கல்யாணி மற்றும் இதர பிரிவுகளுடன் தலைமையகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
இந்த முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு அத்தியாவசிய ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் சாலை வழியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், தேவைப்பட்டால் ஒருங்கிணைந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ வெள்ள நிவாரண மற்றும் நீச்சல் வீரர் குழுக்கள் அனுப்பப்படும்.
கடலில் மேற்கொள்ளப்படும் நிவாரண முயற்சிகளுக்கு உதவியாக, கிழக்கு கடற்படையின் இரண்டு கப்பல்கள் பொருட்கள், மீட்பு மற்றும் டைவிங் குழுக்களுடன் தயாராக உள்ளன. இந்தியக் கடற்படை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அதிக எச்சரிக்கையுடனும் உள்ளது. சிவில் அதிகாரிகளுக்கும் டானா சூறாவளியால் பாதிக்கப்படும் மக்களுக்கும் தனது உதவியை வழங்க கடற்படை தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.