இன்று ஐக்கிய நாடுகள் சபை தினம்: சிறந்த உலகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்..!

இன்று ஐக்கிய நாடுகள் சபை தினம் (ஐ.நா. தினம்) கொண்டாடப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அமைதிக்காக 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒன்றை நிறுவின. ஐ.நா. சாசனம் 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டின் முடிவில் கையெழுத்திடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி ஐ.நா. தினம் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக அமைதி மட்டுமல்லாது பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல் மற்றும் ஒத்துழைப்பை பேணும் ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. தொடக்கத்தில் மொத்தம் 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐ.நா சபையில் இணைந்து கையெழுத்திட்டனர். அதன்பிறகு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 193 உறுப்பு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன.

அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ஐ.நா. உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில், பல்வேறு உறுப்பு நாடுகளில் அந்ததந்த நாட்டு தேசியக் கொடிகளுடன் ஐ.நா. சபையின் கொடியையும் ஏற்றி வைக்கிறார்கள்.

இதுதவிர, பல்வேறு சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதித்து தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்சிகளும் நடத்தப்படும்.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இசை, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஐ.நா. சபைவின் வரலாறு, சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஐ.நா. சபையின் பங்களிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் ஆகிய கருப்பொருளில் அவ்வப்போது கல்வி நிறுவனங்களில் சிறப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

காலநிலை மாற்றம், வறுமை மற்றும் உள்நாட்டு சண்டைகளுக்கான தீர்வு போன்ற முக்கிய பிரச்சினைகள் மற்றும் அதில் ஐ.நா.வின் பணிகளை முன்னிலைப்படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்த தலைமுறையினரை போரின் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதே ஐ.நா. சாசனத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். இருந்தபோதிலும், 1946-ல் ஐ.நா. சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆயுத மோதல்கள் நடந்துள்ளன.

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா.விடம் அமைதிப்படையும் உள்ளது. மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குறிப்பிடத்தக்க பணிகளை செய்துள்ளது.

விளிம்புநிலை சமூகம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினரின் உரிமைகளுக்காக ஐ.நா. சபை தொடர்ந்து குரல் கொடுக்கிறது. வறுமை, பசி மற்றும் சமத்துவமின்மை போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை வழங்கி உள்ளது. அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்குகளை அடைய ஐ.நா. திட்டமிட்டுள்ளது.

ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை செயல்படுத்துவதை உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தவும், அமைதியான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும் இது நல்ல வாய்ப்பாகும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.