இந்தோ-திபெத் எல்லை படைப்பிரிவின் நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்தரி மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா, சீனா இடையே 1962-ல் போர் நடைபெற்றது. இந்தப் போருக்குப் பிறகு அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ஐடிபிபி) படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. சீனாவுடனான 3,488 கி.மீ. நீளம் கொண்ட எல்லையில் ஐடிபிபி படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐடிபிபி நிறுவன நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஐடிபிபி நிறுவன நாள் வாழ்த்துகள். இந்த படைப்பிரிவு துணிவு மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக விளங்குகிறது. நம்மை பாதுகாப்பதற்காக மிகவும் சவாலான நிலப்பரப்புகள் மற்றும் கடினமான காலநிலைக்கு நடுவே அவர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும் இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளின்போது ஐடிபிபி படையினர் மேற்கொள்ளும் முயற்சியை நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர்” என பதிவிட்டுள்ளார்.