100% சரியான பட்டியலை வெளியிட வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ள நிலையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், இரட்டை பதிவுகளை நீக்கி 100 சதவீதம் சரியான பட்டியலை வெளியிட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், பாஜக சார்பில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் சந்திரமோகன், ராஜேஷ், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுக நயினார், சுந்தரராஜ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ரவீந்திரநாத், ஆம் ஆத்மி சார்பில் மகளிர் அணி தலைவர் ஸ்டெல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் அரசியல்கட்சி பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி (திமுக): ஒவ்வொரு அனைத்துக்கட்சி கூட்டத்திலும் திமுக சார்பில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டியும், இதுவரை தேர்தல் ஆணையம் செவிசாய்த்ததாகத் தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலை, உள்ளாட்சி நிர்வாகங்களிடம் பெற்று நீக்கிவிடலாம் என்று தெரிவித்துள்ளோம்.

டி.ஜெயக்குமார் (அதிமுக): இறப்பு சான்றிதழ்களை உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் துறையிடம் இருந்து பெற்று இறந்தவர்கள் பெயர்களை நீக்கிவிடலாம். அதேபோல், முகவரி மாறியவர்களின் பெயர்களை தொழில்நுட்பம் மூலம் நீக்கி, 100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கரு.நாகராஜன் (பாஜக): முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகிய இறந்தவர்கள் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளது. மாநகராட்சி, வருவாய் துறையில் இருந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்படுபவர்கள் பெயர்களை பெற்றுநீக்கலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம்.

ஜி.ஆர்.ரவீந்திரநாத் (இந்திய கம்யூனிஸ்ட்): பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே படிவங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபடுகிறது. இந்த போக்கை கைவிட வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜன.6-ல் இறுதி பட்டியல்: குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின் முதல் கட்டமாக அக்.29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவ.28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்வதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

நவ.16, 17 மற்றும் 23, 24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கலாம். இறுதிவாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.