இந்நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கு முன்னணிப் பங்காற்றுகின்ற மலையகத் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றி அதன் பலன்களை மக்களுக்கு கூடிய விரைவில் வழங்க வேண்டும் என சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் (23) மாலை உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தியும் கலந்துகொண்டார்.
சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் ‘பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராம அதிகாரசபை, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளை மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் அறக்கட்டளை’ ஆகியவற்றின் கீழ் பல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அரசின் உதவியுடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்மொழியப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சமூக உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கைகளை குறித்த நிறுவன அதிகாரிகள் இதன்போது சமர்ப்பித்தனர்.
2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள், தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களில் 90% வீதமான வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹெட்டன், நுவரெலியா, கண்டி, கேகாலை மாவட்டங்களில் முறையே 91%, 90%, 92%, 100% வீதமான வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இது தவிர பெருந்தோட்டப் பிரதேசத்திற்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபையினால் (New Villages Development Authority For Plantation Region) செயற்படுத்தப்படுகின்ற 1060 வீட்டு உரிமைகள் மற்றும் காணி உறுதிகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 563 பத்திரங்கள் முழுமையாக பதிவு செய்து முடிவுற்ற நிலையிலும், 497 பத்திரங்கள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
பணிகள் நிறைவடைந்த வீடுகள் மற்றும் பதிவு முடிந்த காணி உறுதிப் பத்திரங்களை அரசியல் அதிகாரத்துடன் தொடர்பு கொள்ளாமல் அரச அதிகாரிகள் மட்டத்தில் உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அது தொடர்பில் அவதானம் செலுத்தி பெருந்தோட்டப் பிரதேசத்திற்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டின் ஊடாக மலையக பெருந்தோட்ட மக்களின் வீடுகள் தொடர்பான முறையான கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காக கையடக்கத் தொலைபேசி டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், மலையக மக்களின் வீடுகள், நிலம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான முறையான தரவுக் தொகுதியொன்றை முதன்முறையாக பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் இதனை பயனுள்ள விதத்தில் பயன்படுத்த முடியும்.
இக்கலந்துரையாடலில், அரச நிறுவனங்களுக்கிடையில் ஏதாவது ஒருங்கிணைப்புத் தடைகள் காணப்படுமாயின் அதனை தீர்ப்பதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியதுடன், இந்தத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
மலையகத்தில் வாழும் பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மதிய உணவுத் திட்டங்களில் நிலவும் குறைபாடுகளை அடையாளங் கண்டு அதனை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதுமட்டுமின்றி மலையக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான விடயங்களில் அரச தோட்ட நிறுவனங்களின் ஆதரவும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று, தமிழ் மக்களின் விசேட பண்டிகையான தீபாவளிக்கு சிறுவர்கள் மற்றும் உரிய சமூகத்தினரை உள்ளடக்கிய விசேட கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்;.
சௌமியமூர்த்தி தொண்டமன் அறக்கட்டளையின் கீழ் ஹெட்டன் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார நிலையத்தில் கலாசார மற்றும் தொழில்சார் கற்கைநெறிகளில் பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகிய இளைஞர்களை பங்குபற்ற செய்ய வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், ஹோட்டல் சேவை கற்கைநெறிகள் உள்ளிட்ட தொழில்சார் கற்கைநெறிகளை மலையக இளைஞர் யுவதிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.