மதுரை: தாமிரபரணி வாழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உத்தரவிடக்கோரி முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகி உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். இல்லை என தெரிவிக்கப்பட்டதால், அவர் உடனடியாக காணொளி காட்சி வழியாக மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
சிறிது நேரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எனக் கேட்டனர்.
அதற்கு அதிகாரிகள், “கழிவுநீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், கழிவுநீர் விவகாரத்தில் 2021-ம் ஆண்டில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்து உள்ளோம்.” என்று கூறினர்.
அப்போது நீதிபதிகள், “தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிது காலம் அவகாசம் தருகிறோம். அதற்குள் உரிய நடவடிக்கை எடுத்து, அதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின்போது நெல்லை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.