Vijay TVK: 2G, Time To Lead, விவசாயப் பிரச்னை – விஜய்க்கு அரசியல் இமேஜ் கொடுத்த 5 படங்கள்

‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன், இளைய தளபதி , தளபதி என அடுத்தடுத்த கட்டங்களை எட்டி இப்போது கட்சித் தலைவர் என்ற நிலையை எட்டி இருக்கிறார் விஜய்.

`தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சித் தொடங்கி முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். முழு நேர அரசியலில் களம் காண இருப்பதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவருக்கான அரசியல் பாதையை அமைத்துக் கொடுத்ததில் அவரின் சினிமாக்களுக்கும், அதைச் சுற்றி நடந்த நிகழ்வுகளுக்கும் பெரும் பங்குண்டு. தன்னுடைய சில படங்கள் வழியாகவும் விஜய் தனது அரசியல் இமேஜை கட்டமைத்துக் கொண்டார். அப்படி விஜய்க்கு அரசியல் இமேஜ் அமைத்து கொடுத்த ஐந்து படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்!

TVK| Vijay

காவலன்

* மலையாள படம் ஒன்றின் ரீமேக்கான இந்த ‘காவலன்’ 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. ஆனால், ரிலீஸூக்கு முன்பு எக்கச்சக்க சிக்கல்களை இந்தப் படம் சந்தித்தது. அதுவரை எஸ்.ஏ.சியும் விஜய்யும் தி.மு.கவின் அனுதாபியாகத்தான் பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்த காலக்கட்டத்தில் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றியதையும் கூட்டம் கூட்டியதையும் திமுகவின் தலைமை ரசிக்கவில்லை எனச் சொல்லப்பட்டது. எஸ்.ஏ.சியே பின்னர் ஒரு பேட்டியில் அந்த காலக்கட்டத்தில் ஈரோட்டில் விஜய்யை வைத்து ஒரு கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது அரசு மறுத்தது எனக் கூறியிருக்கிறார்.

`காவலன்’ படத்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஆடுகளமும் வெளியாகியிருந்தது. இதனால் விஜய்யின் `காவலன்’ படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் உண்டு. அப்போது `காவலன்’ படத்துக்கான நிகழ்ச்சி ஒன்றில் தி.மு.கவின் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரியவில்லை என விஜய்யே பேசியிருந்தார். இதன்பிறகான 2011 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.ஏ.சியும் விஜய்யும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெயலலிதாவிடம் பொக்கே நீட்டினர்.

தலைவா `Time To Lead’

* அரசியல்ரீதியாக விஜய்யை அதிகமாக அலைக்கழித்த படம் தலைவா `Time To Lead’ . தொடர்ச்சியாகப் படத்தில் பல தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தப்போது 2012 ஜனவரியில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான `நண்பன்’ படத்தின் மூலம் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்திருந்தார் விஜய். அதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான `துப்பாக்கி’ படம் விஜய்க்கு மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்தது. துப்பாக்கியின் மெகா வெற்றியால் அவரின் அடுத்த படமான `தலைவா’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறின.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2013 ஆகஸ்ட் 9-ம் தேதியன்று தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் மிகப் பெரிய ரிலீஸூக்குக் காத்திருந்தது ‘தலைவா’. ஆனால், திடீரென தலைவா படம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை. ‘விஜய்யின் தலைவா படம் வெளியானால், திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு வைப்போம்’ என்று திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்ததைத் தொடர்ந்து படம் வெளியாகவில்லை. அப்போதையை ஆளுங்கட்சியும் விஜய் வெள்ளை உடை அணிந்ததை அவ்வளவாக ரசிக்கவில்லை. காரணம் ‘தலைவா’ என்ற டைட்டில் என்பதைத் தாண்டி ‘டைம் டு லீட்’ என்ற சப்லீட் ஜெயலலிதாவைக் கோபம் அடையச் செய்தது என்று அப்போது செய்திகளெல்லாம் வெளியானது.

அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் சத்யராஜ் ‘அண்ணா’ என்ற கதாபாத்திரத்தில் மக்கள் தலைவனாக நடித்திருப்பார். அவருக்கு பிறகு யார் எனும் போது அண்ணாவுக்கு பிறகு அவர் இடத்துக்கு நீங்கதான் வரனும் என்பது போல வசனங்களும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக ‘தலைவா…தலைவா’ பாடல் இன்னும் அரசியல் சூட்டைக் கிளப்பியது. ‘பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால், வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்’ என்ற பாடல் வரிகளும், படத்தில் ‘நம்ம ஊரு அரசியல்ல சேர்றதுக்கு எல்லா தகுதியும் உனக்கு இருக்குப்பா…’ என சந்தானம் விஜய்யைப் பார்த்து பேசிய வசனங்களும் இடம்பெற்றிருக்கும். இது அரசியல் வட்டாரங்களில் ஒரு வித சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது. விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. அதற்காகத்தான் ரசிகர்களின் பல்ஸை அறிய இப்படியெல்லாம் வசனம் பேசுகிறார் என்ற கருத்தும் எழுந்தது.

கத்தி

கத்தி

* துப்பாக்கிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸூடன் விஜய் மீண்டும் கைகோர்த்த ‘கத்தி’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தாகக் கூறி, ‘கத்தி’ படத்தை வெளியிடக்கூடாது என சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஒருவழியாக பிரச்சனை தீர்க்கப்பட்டு படம் வெளியானது. இந்தப் படத்திலும் அப்போது நிலவிய விவசாயிகள் தற்கொலை பிரச்னை, 2G விவகாரங்கள் தொடர்பான வசனங்களும் இடம்பெற்றிருக்கும். ஒரு கூல்ட்ரிங்ஸ் கம்பெனியை எதிர்த்து இந்த படத்தில் விஜய் கொந்தளித்திருப்பார்.

ஆனால், பல வருடங்களுக்கு முன்பு அந்த கம்பெனியின் விளம்பரப்படங்களில் நடித்திருந்ததே விஜய்தான். அதுமட்டுமில்லாமல் படங்களிலும் கிடைக்கிற கேப்பிலெல்லாம் அந்த கூல்ட்ரிங்ஸுக்கு விளம்பரம் செய்திருப்பார். இது கத்தி படம் வெளியான போது பலத்த விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், விஜய் இந்தத் தவறை உணர்ந்து வெளிப்படையாகவே மன்னிப்புக் கேட்டு இந்த சர்ச்சையை சுமுகமாக முடித்து வைத்தார். மேலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் ‘தமிழ்நாடு… தமிழன்… நான் தியாகியும் இல்ல, அதேநேரத்துல நான் துரோகியும் இல்ல!’ என தமிழனத்துக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்திருக்கிறார் என்கிற விமர்சனத்துக்கு விஜய் பதிலடி கொடுத்திருப்பார். நிறைய தமிழ் அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் சீமான் விஜய்க்கு ஆதரவாக நின்றிருப்பார். ‘இப்போதான் தமிழ்நாட்டுல ஒரு தமிழ் நடிகன் உச்சத்துக்கு வந்துருக்கான். அவனுக்கு நாம ஆதரவுதான் கொடுக்கணும்!’ எனக்கூறி விஜய்யை தம்பியாக அரவணைத்திருந்தார்.

மெர்சல்

மெர்சல்

* விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் விஜய் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா பற்றி வசனங்களைப் பேசியிருப்பார். இதற்கு மெர்சல்’ படத்தில் மோடி அரசின் ஜிஎஸ்டி-யை விமர்சித்து விட்டார்கள் என தமிழிசை சொல்ல, அடுத்து ஹெச்.ராஜா தன் பங்குக்கு ‘ஜோசப் விஜய்’ என மதச்சாயம், விஜய்க்கு ஆதரவாகப் பலரும் களமிறங்கினர். ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக ட்வீட் செய்தார். ‘மெர்சல்’ மிகப்பெரிய ஹிட் ஆனது. பிரச்னை புகைந்துகொண்டிருந்த போது அமைதியாக இருந்த விஜய் கடைசியில் ஒற்றை அறிக்கை மூலம் மதரீதியாக விமர்சித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்தார். ‘Jesus Saves Us’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் லெட்டர் பேடில் ‘ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டே தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மெர்சல் சச்சரவுகள் விஜய்க்கு அகில இந்திய அளவில் நல்ல மைலேஜாக அமைந்தது.

சர்கார்

* 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்கார். அரசு கொடுத்த இலவசங்களை படத்தில் கடுமையாக விமர்சித்திருப்பார்கள். அதுபோக வில்லிக்கு ஜெயலலிதா சாயல் கொடுத்திருப்பதாக அதிமுகவும் பொங்கியது. அதிமுகவினர் தியேட்டர்களில் இறங்கி விஜய்யின் பேனர்களைக் கிழித்த சம்பவங்களும் நடந்தன. இதே படத்தில் ‘ஒரு விரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே… நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை இங்கு அடங்காதோ…’ என சர்காரில் இடம்பெற்ற பாடல் முழுவதுமே அரசியல்தான்.

சர்கார்

இந்தப் பட வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பல விஷயங்களை விஜய் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. “நான் இப்படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால், எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்” என பேசியிருந்தார். சொன்னபடி அரசியலுக்கு வந்துவிட்டார். சரியான அரசியல் புரிதலோடு அடுத்தடுத்து துடிப்பாக இயங்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.