தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. தனது கட்சித் தொண்டர்களுக்கு இதுவரை மூன்று கடிதங்கள் எழுதி விஜய்யும் தன் பங்குக்கு உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ‘விஜய்க்கு பின்னால் இருந்து ஆலோசனைகள் வழங்கும் இடத்தில் யாரோ சில முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள்’ என்ற ஒரு தகவல் கடந்த சில தினங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது.
மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திடம் அரசியல் தொடர்பாக விஜய் பேசி வருவதாகவும் சில தகவல்கள் கிடைக்க, தொடர்புடைய வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தோம்.
”நேர்மையான அதிகாரி என பெயரெடுத்த சகாயத்துக்கு ஒரு கட்டத்துல தமிழக அரசியல் களத்தின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர் டார்கெட் செய்யப்பட்டதாக நினைத்தார். இதனாலதான் பதவி காலம் முடியும் முன்பே வி.ஆர்.எஸ் கொடுத்தார்.
அரசுப் பணியிலிருந்து விலகி விட்ட பிறகு ‘மக்கள் பாதை’ என்ற பெயரில் பொதுச் சேவையில் ஈடுபட நினைத்தார். அந்த அமைப்பும் ஆரம்ப நாட்களில் உத்வேகத்துடன் இயங்கியது. பிறகு, அதன் செயல்பாடும் நாளடைவில் குளறுபடிகளால் நின்று போனது.
தூய்மையான ஒரு அரசியலை விரும்பிய சகாயத்தால் அது முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் அரசியலும் வேண்டாம், பொது சேவையும் வேண்டாம் என ஒதுங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க ஆரம்பித்து விட்டார்.
இந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருந்து ஆலோசனைகள் வழங்கச் சொல்லி அவர்கிட்ட சிலர் பேசியிருக்காங்க. அந்த சிலர், `விஜய் சொல்லித்தான் சகாயம் கிட்டப் பேசினாங்களா அல்லது, அவங்க தனிப்பட்ட ஆர்வத்துல பேசினாங்களா’னு சரியாத் தெரியலை. ஆனா பேசுனது நிஜம்.
அப்ப அவங்க கிட்ட நிறைய பேசியிருக்கார் சகாயம். அதாவது நடப்பு தமிழ்நாட்டு அரசியல் குறித்த தன்னுடைய கருத்துகளை முன்வைத்துள்ளார். அதேநேரம் விஜய்க்கு ஆதரவு தருவது பற்றி பிடி கொடுக்கவே இல்லையாம்.
ஆனா இந்த விஷயத்தை அவர்கிட்ட எடுத்துட்டுப் போனவங்க விடாமல் தெளிவாக அவருக்கு எடுத்துச் சொல்லி இருக்காங்க.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இரண்டும் இல்லாத ஒரு ஆட்சியை அமைக்க விஜய் விரும்புகிறார். அதேநேரம் பி.ஜே.பி-யின் ‘மதச்சார்பு அரசியலை அவர் ஒரு நாளும் கையில எடுக்க மாட்டார்’ எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சகாயம் அந்த சமயத்தில் எந்த ஒரு உத்தரவாதத்தையும் தரவில்லைனு மட்டும் சொன்னாங்க” என்கிறார்கள் குறிப்பிட்ட அந்தச் சந்திப்பின் போது உடனிருந்தவர்கள்.
தவெக-வுக்குப் சகாயம் வருகிறாரா என்பது மாநாடு முடிந்த பின்னர் தெரிந்து விடும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb