“2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி!” – இபிஎஸ் உறுதி

மேட்டூர்: “வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: “அதிமுக வலுவான கூட்டணி இல்லாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றது. இதனால், அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது குறித்து முதல்வருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு தான் ஒப்பிட வேண்டும். ஆனால் நாமக்கல்லில் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாகவும் பேசுகிறார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது. 2019-ம் ஆண்டை விட (33.92%) 2024 நாடாளுமன்ற தேர்தலில் (26.50%) திமுகவின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டை விட (19.39%), 2024 நாடளுமன்ற தேர்தலில் (20.50%) அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி செய்கிறார். திமுக செய்த சாதனைகளை நம்பி தேர்தலில் நிற்பதில்லை. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிவிட்டு, ‘கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும் ஆனால் பிளவு இருக்காது’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்று தான் அர்த்தம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தை மட்டுமே வென்ற அதிமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிட்டால் திமுக குறைவான இடத்தில் தான் வென்றுள்ளது. ஊழல் செய்வதில் தான் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின், நான் ஜோசியராக மாறிவிட்டேனா எனக் கேட்கிறார். நான் கூறிய ஜோதிடம் பலிக்கும், திமுக தோற்கும்.

2026 தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியமைக்கும். திமுக கம்பெனிக்கு ஸ்டாலின் தான் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குநர்கள். அதனால் தான் ஸ்டாலின் முதல்வராகவும், உதயநிதி துணை முதல்வராகவும், கனிமொழி எம்பி-யாகவும் இருக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். உதயநிதியை துணை முதல்வராக்கியது தான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார். எனக்கு ஆளுமை இருந்ததால் தான் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சியை மேற்கொண்டும் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொண்டு வந்த எந்தவொரு திட்டத்தாலும் தமிழ்நாடு முதலிடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றோம். திறன் மிக்க அரசாக அதிமுக அரசு விளங்கிய நிலையில், அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். நாம் பெற்ற தேசிய விருதுகளே அதிமுகவின் சிறப்பான ஆட்சிக்கு சான்று. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.

அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழக அமைச்சர் என்பதை உணராமல், சேலத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறார். இத்தனை நாட்கள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்திவிட்டார்கள். ஆனால், திட்டங்கள் தான் வரவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என்று பழனிசாமி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.