யானை – மனித மோதலுக்கு தீர்வு காண்பதற்காக விரைவான மற்றும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வனஜீவராசிகள், வனவளங்கள் மற்றும் புகையிரத திணைக்களங்களின் தலைவர்களுடன் சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரயில்வே பொது முகாமையாளர், இதுவரையிலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் பொதிகளை ஏற்றி செல்லும் ரயில்களின் நேர அட்டவணை பகல் நேரமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், புகையிரத பாதையில் இருந்து 10 மீற்றர் தூரம் வரை யானைகள் கடக்கும் இடங்களை தெளிவாக கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
பயிற்சித் திட்டங்களை முறைப்படுத்துவதற்கான பொறிமுறை, 1992 விசேட தொலைபேசி அழைப்பு சேவை மற்றும் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான பொறிமுறையின் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.