மும்பை: ஆபாசம் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் ஓவியங்களை உடனடியாக விடுவிக்குமாறு சுங்கத் துறை அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த முஸ்தஃபா கராச்சிவாலா என்ற நபர் உலகப் புகழ் பெற்ற ஓவியர்களான எப்.என்.சோஸா மற்றும் அக்பர் படாம்ஸீ ஆகியோரின் சில ஓவியங்களை லண்டனில் நடந்த ஏலத்தில் ரூ.8.33 லட்சத்துக்கு வாங்கியிருந்தார். இதனை அங்கிருந்து மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு வந்தபோது விமான நிலையத்தில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவை ஆபாசமாக இருப்பதாக பறிமுதல் செய்தனர்.
நிர்வாண காட்சிகள் அடங்கியிருப்பதாக அந்த ஏழு ஓவியங்களையும் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனர். இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கராச்சிவாலா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சோனக் மற்றும் ஜிதேந்தர் ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு “நிர்வாணத்தையும் பாலுறவையும் பிரதிபலிக்கும் எல்லா ஓவியங்களையும் ஆபாசம் என்று வகைப்படுத்த முடியாது” என்று தெரிவித்தது.
மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “பாலுறவும் ஆபாசமும் எப்போதும் சமமாக இருக்க முடியாது என்பதை சுங்கத் துறை துணை ஆணையர் மறந்துவிட்டார். ஆபாசம் என்பது பாலுறவை தவறான ஆர்வத்துடன் கையாள்வது. எனவே துணை ஆணையர் பிறப்பித்த இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, அடுத்த 2 வாரங்களுக்குள் பறிமுதல் செய்த ஓவியங்களை விடுவிக்க வேண்டும்.
அத்தகைய கலைப்படைப்புகளை அங்கீகரிக்கவோ, விரும்பவோ அல்லது ரசிக்கவோ அனைவருக்கும் அவசியமில்லை என்றாலும் கூட, ஒரு அதிகாரியின் தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் கலைப்படைப்புகளைத் தடைசெய்வது, தணிக்கை செய்வது, இறக்குமதி செய்வதைத் தடை செய்வது அல்லது அழிப்பது ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது” இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.