மும்பை: மகாராஷ்டிர தேர்தலில் முக்கிய திருப்பமாக வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து சிவசேனா சார்பில் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக அறியப்பட்ட மிலிந்த் தியோரா மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அவருக்கு மும்பை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைப்பதென கட்சி மேலிடம் முடிவெடுத்தது.
சிவசேனா (யுபிடி) கட்சியின் பொது செயலரும், உத்தவ் தாக்கரவின் மகனுமான ஆதித்ய தாக்கரே வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு, அவருக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் வகையில் வலுவான வேட்பாளரை களமிறக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்த சூழ்நிலையில்தான் ஆதித்யா தாக்கரேவை எதிர்த்து மிலிந்த் தியோரா களமிறங்குவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு வோர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவைச் சேர்ந்த சந்தீப் தேஷ்பாண்டேவும் வோர்லி தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.