கேரளாவின் திருச்சூரில் 108 கிலோ தங்கம் பறிமுதல்: ரகசியமாக நடந்த ஆபரேஷன் ‘தங்க கோபுரம்’

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் 78 தங்க நகை உற்பத்தி மையங்கள் மற்றும் மொத்த வியாபார கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 108 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதம் கேரள மாநிலத்துக்கு செல்கிறது. கேரளாவில் கடந்தாண்டு சுமார் 150 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டால், குறைந்த அளவில் இருந்தது. கணக்கில் காட்டப்படாமல் தங்கம் விற்பனை செய்வது அதிகளவில் நடைபெறுவது தெரியவந்தது. இது குறித்த உளவுத் தகவலை கேரள ஜிஎஸ்டி உளவுத்துறை துணை ஆணையர் தினேஷ் குமார் கடந்த 7 மாதங்களாக சேகரித்தார்.

கணக்கில் காட்டப்படாத தங்கம் அதிகளவில் விற்பனையாவதால், திருச்சூரில் தங்க நகை உற்பத்தி செய்யப்படும் இடங்கள், தங்கம் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் ஒரே நேரத்தில் மிகப் பெரியளவில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் உயர் அதிகாரிகள் 6 பேருக்கு மட்டுமே தெரியும். இந்த சோதனையை ரகசியமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனுக்கு தங்க கோபுரம் என பெயரிடப்பட்டது. கேரளாவின் பல மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ரித்துறை அதிகாரிகள் திருச்சூருக்கு பயிற்சிக்கு வரும்படி அழைக்கப்பட்டனர்.

இவர்களை வைத்து கடந்த புதன்கிழமை மாலை 4.30 மணி முதல் வியாழன் காலை 11 மணி வரை தங்க நகை உற்பத்தி செய்யும் இடங்கள், மொத்த வியாபாரம் நடைபெறும் இடங்கள் என 78 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் மிகப் பெரியளவில் இது போன்ற சோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதில் கணக்கில் காட்டப்படாத 108 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல கடைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சில ஊழியர்கள் தங்கத்துடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை வரி அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். ஒருவர் 6.5 கிலோ தங்கத்தை எடுத்துக் கொண்ட தப்ப முயன்றார். கடை உரிமையாளர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.1,200 கோடி அளவிலான விற்பனையை கணக்கில் காட்டாமல் மேற்கொண்டதை ஒப்புக் கொண்டனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக கணக்கில் காட்டாமல் மேற்கொண்ட தங்க விற்பனை விவரங்கள் குறித்து கேரள ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 108 கிலோ தங்கம் அரசு கருவூலத்துக்கு மாற்றப்படவுள்ளது. கணக்கில் காட்டப்டாத தங்கத்துக்கு 3 சதவீத ஜிஎஸ்டி தொகை , 3 சதவீதம் அபராதம் மற்றும் வட்டி செலுத்திய பின்பே பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்கப்படும் என கேரள ஜிஎஸடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் ரூ.5.5 கோடி அபராதம் வசூதலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.