புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களின் 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் பரபரப்பான நிலை காணப்பட்டது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவரும் விமானங்கள், உள்நாட்டில் இயக்கப்படும் விமானங்களுக்கு சமீபகாலமாக தொடர்ந்து குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 12 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 275-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு குண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம், பயணநேர மாற்றம், கால தாமதம் போன்ற நடவடிக்கைகளால் பயணிகள் தொடர்ந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுமட்டுமின்றி, அவசரமாக தரையிறக்கப்படும் விமான நிலையங்களுக்கான கட்டணம், பயணிகளுக்கான இழப்பீடு என ஒவ்வொரு முறையும் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாகவே இந்த மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, குண்டு மிரட்டல் தொடர்பான தரவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட வலைதள நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புரளி கிளப்பும் நபர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் போலீஸார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரேநாளில் 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு குண்டு மிரட்டல் வந்த நிலையில் நேற்று, இந்திய நிறுவனங்களின் 25-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இண்டிகோ நிறுவனத்தின் டெல்லி – இஸ்தான்புல், ஜெட்டா- மும்பை, மும்பை – இஸ்தான்புல், ஹைதராபாத் – சண்டிகர், புனே- ஜோத்பூர், கோழிக்கோடு – தம்மம், உதய்பூர்- டெல்லி ஆகிய 7 விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார். இதனால், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்கள், ஏர் இந்தியாவின் 6 விமானங்களுக்கும் நேற்று குண்டு மிரட்டல் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.