‘‘இரண்டு நாள் மழைக்கே மதுரையில் ஏன் இவ்வளவு பெரிய பாதிப்பு?’’ – அரசு விளக்கமளிக்க தேமுதிக வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதுரையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கின்றது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு மற்றும் குளங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் மதுரையில் இந்த அளவு தண்ணீர் தேங்க வேண்டியதன் காரணம் என்ன? கண்மாய், ஓடைகள் முறையாகத் தூர்வாராமல் இருந்ததினாலே ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளாகிய பீபிகுளம், செல்லூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பெரும் மழையாக இருந்தாலும் ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை ஆராய்ந்து மதுரை மாநகராட்சி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக மாநகராட்சியும், அதிகாரிகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து மாத்திரைகள், தங்குவதற்கான இடம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்துத் தேங்கி இருக்கின்ற தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் தடுத்துப் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவிகளைச் செய்து இந்த மழைக் காலத்தில் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும் விளக்கம் தரவேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.