தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. நாளை கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டு நடிகர் விஜய் , கழகத் தலைவர் விஜய்யாக உருவமெடுத்தார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதும் கட்சியின் கொடி, பாடல் என ஒவ்வொன்றாக வெளியிட்டது த.வெ.க. விஜய்யின் அரசியல் பாதை தீடீரென தொடங்கப்பட்ட விஷயம் அல்ல என்பது ஊர் அறிந்ததே.
விஜய் என்ன வண்ணத்திலான உடையை அணிகிறார், சைக்கிளில் செல்கிறாரா? காரில் செல்கிறாரா? நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறாரா? என ஒவ்வொரு விஷயம் குறித்தும் அரசியல் களத்தில் பேச்சுகள் எழும். இதற்கெல்லாம் அவர் மேடை மற்றும் படங்களில் பேசிய அரசியல் என்பதைத் தாண்டி படங்களில் இடம்பெற்ற பாடல் வரிகளும் ஒரு முக்கியமான காரணமே.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்பது போன்ற பிரச்னைகளுக்கு களத்தில் இறங்கி குரல் கொடுத்ததோடு இந்த பிரச்னைகள் தொடர்பாக விஜய்யின் பட பாடல்களும் வலியுறுத்தியிருக்கிறது.
விஜய் திரைப்படத்தின் இன்ட்ரோ பாடல்கள் என்றதும் பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது பாடலாசிரியர் கபிலனின் வரிகள்தான். `ஆள் தோட்ட பூபதி’ தொடங்கி `போக்கிரி பொங்கல்’, `அர்ஜுனரு வில்லு’ என அத்தனை ஹிட் பாடல்களை விஜய்க்கு கொடுத்திருக்கிறார் கபிலன். போக்கிரி திரைப்படத்தின் சமயத்தில் அத்திரைப்படத்தின் இயக்குநர் பிரபுதேவாவிடம் `எம்.ஜி.ஆர், ரஜினியை போன்று விஜய்யை பின் தொடர்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் பாடல்களில் சில கருத்துக்களைச் சொல்வோம்!’ எனக் கூறியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். பிரபுதேவாவுக்கும் இந்த ஐடியா பிடித்துவிட உடனடியாக ஓகே என டிக் அடித்துவிட்டார். இந்த முடிவுக்குப் பிறகு வந்த பாடல்தான் போக்கிரி திரைப்படத்தின் `ஆடுங்கடா என்னை சுத்தி’ என்ற பாடல். இந்தப் பாடலில் துள்ளலான மெட்டுடன் சில முக்கியமான அரசியலையும் பேசியிருப்பார் கபிலன்.
அதில் `சேரி இல்லா ஊருக்குள்ள பிறக்க வேணும் பேரப்புள்ள’ , `தீ பந்தம் எடுத்து தீண்டாமைக் கொளுத்து’ என வரிகள் அரசியல் பேச , படத்தில் அதை விஜய் பாட என விஜய்யின் அரசியல் கருத்தாகவே அது பார்க்கப்பட்டது. இதன் பிறகு ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அதிகளவில் பேசப்பட்ட நேரத்தில் `வில்லு’ திரைப்படத்தில் அது தொடர்பான வரிகளை எழுதினார் கபிலன். அத்திரைப்படத்தின் தொடக்கப் பாடலான `ராமா ராமா’ பாடலில் `ஆண்டவன்தான் என்ன பார்த்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டா… அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்’ என வரி இடம்பெற்றிருக்கும்.
இதனையடுத்து விஜய்யும் இத்திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கை இனப்படுகொலையை நிறுத்தக் கோரியும் சென்னையில் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அடுத்ததாக `வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் `நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலிலும் விவசாயிகளுக்கு ஆதரவான விஷயங்களை பேசுவதாக கபிலன் `உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கணும். அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்குப் படைக்கணும்!’ என்பதோடு `வறட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா, காத்திருந்து ஓட்டுப் போட்டு கருத்துப் போச்சு நகமடா’ என நய்யாண்டியும் செய்திருப்பார்.
இப்படியான அரசியல் பேசிய கபிலனின் வரிகள் `சுறா’ திரைப்படத்தில் விஜய்க்கு தலைவன் இமேஜ்ஜை கட்டமைக்கும் பாடலையும் எழுதினார். அந்தப் படத்தில் `தமிழன் வீர தமிழன், தலைமை தாங்கும் ஒருவன், துயரம் நேர்ந்த இடத்தில், தோழன் தோள் கொடுப்பான்’ என எழுதினார். இந்த மாதிரியான அரசியல் கருத்துக்கள் பாடல்களில் தொடர்ந்ததால் இதை விஜய்யின் அரசியல் நிலைபாடாகவே மக்கள் கருதத் தொடங்கினர்
இப்படி பாடல் வரிகளில் அரசியல் பேசிய விஜய் அடுத்தடுத்து தன்னுடைய திரைப்படங்களிலும் வெளிப்படையாக அரசியல் பேச தொடங்கினார். அதனால் விஜய் சந்தித்த இன்னல்களும் ஏராளம். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகமெங்கும் தீவிரமாக இருந்த சமயத்தில் எவருக்கும் தெரியாமல் அந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர் அதன் பிறகு அந்தப் போராட்டம் தொடர்பாக பேசி ஒரு காணொளியையும் வெளியிட்டார். இந்த பிரச்னைகளுக்குப் பிறகு வெளியான விஜய்யின் `மெர்சல்’ திரைப்படத்தில் `ஆளப்போறான் தமிழன்’ என்ற தமிழர்களின் பெருமை சொல்லும் பாடலும் இடம்பெற்றிருந்தது.
இதன் பிறகு ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய். இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளியான `சர்க்கார்’ திரைப்படத்தில் `ஒரு விரல் புரட்சி’ என்ற பாடல் இடம் பெற்றது. ‘நீதியைக் கொல்கிறான் மெளனமாய் போகிறோம்!’ போன்ற வரிகளெல்லாம் அப்போது ஆட்சியிலிருந்த அரசை நேரடியாக விமர்சனம் செய்யும் கருத்தாகவே பார்க்கப்பட்டது.
இது போன்ற பாடல் வரிகளில் அரசியல் பேசி விஜய்யின் அரசியல் இமேஜ்ஜுக்கு அஸ்திவாரம் போட்டது கபிலனின் வரிகள். அந்த இமேஜ்ஜை பன்மடங்கு உயர்த்தும் அளவிற்கு பாடலாசிரியர் விவேக்கும் விஜய் படங்களில் `ஆளப்போறான் தமிழன்’, `ஒரு விரல் புரட்சி’ பாடல்களை எழுதினார். தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பாடலையும் இவர்தான் எழுதியிருக்கிறார்.
விஜய்யின் இந்தப் பாடல் வரிகளில் உங்களுக்குப் பிடித்த பாடல்வரிகளைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…