இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வருகிற திரைப்படம் `ஜாலியோ ஜிம்கானா’.
இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். அவரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள `ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தின் முதல் பாடலான `போலீஸ்காரனை கட்டிகிட்டா’ பாடல் நேற்று (அக்டோபர் 25) வெளியாகியிருந்தது. இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரமே இந்த பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் முழுவதும் இரட்டை அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கிறதென இப்பாடலைச் சமூக வலைத்தளமெங்கும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தப் பாடல் பற்றி கேட்பதற்கு இயக்குநர் சக்தி சிதம்பரத்தைத் தொடர்புக் கொண்டோம். அப்போது நம்மிடையே பேசிய அவர், “பாடல் செம ஹிட். இன்னைக்குள்ள 1 மில்லியன் டச் பண்ணிடும். சமூக வலைத்தளங்கள்ல வர்ற விமர்சனங்களைப் பற்றி நான் கவலையே படல. மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்கிறாங்க. ஒரு பெண் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை இப்படியெல்லாம் இருக்கணும்னு சொல்றதுதான் இந்த பாடல். இது டபுள் மீனிங், டிரிப்ள் மீனிங்காக இருக்குனு சொல்ற விஷயங்களுக்குள்ள நான் போகல. பாடல் ஹிட் அவ்வளவுதான்.
`மச்சான்’ படத்துல `நண்பா என்ன மறந்துட்டியா’ பாடல் எழுதியிருந்தேன். அது நல்ல ஹிட். அதே மாதிரி ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போ மறுபடியும் பாடல் எழுதியிருக்கேன். `போலீஸ்காரனை கட்டிகிட்டா லத்திய வச்சு அடிப்பான். டாக்டரை கட்டிகிட்ட ஊசியால குத்துவான்’னு சொல்றதை நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க. அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுனு சொல்ற மாதிரிதான் இது.” எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…