IND vs NZ Test, Rohit Reaction | நியூசிலாந்து அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. 113 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் தோல்வியடைந்து பல மோசமான சாதனைகளை வசமாக்கியுள்ளது இந்திய அணி. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசையிலும் இப்போது பின்தங்கியுள்ளது. புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததற்கு, நான் மட்டும் காரணமல்ல ஒட்டுமொத்த அணியும் தான் என கூறினார். இத்தனைக்கும் இவருடைய மோசமான பேட்டிங்கும் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
ரோகித் சர்மா பேசும்போது, ” புனே டெஸ்ட் தோல்வி மிகப்பெரிய ஏமாற்றம். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. நியூசிலாந்து அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். அவர்கள் எங்களை விட மிக சிறப்பாகவே விளையாடினர். ஒரு சில இடங்களில் உருவான சாதகமான சூழல்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சவாலான விஷயங்களை எதிர்கொள்வதில் தோல்விடைந்துவிட்டோம். நியூசிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பெரிய விஷயம். பிட்ச் பற்றி எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.
முதல் இன்னிங்ஸில் இன்னும் கொஞ்ச ரன்களை எடுத்திருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு அணியாகவே நாங்கள் தோற்றிருக்கும். தனிப்பட்ட யாரும் தோல்விக்கு காரணம் என கூறமாட்டேன்” என தெரிவிதார். வான்கடே டெஸ்ட் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறிய ரோகித் சர்மா, அதற்கு ஏற்ற உத்திகளுடன் எங்களை தயார்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார். உடனடியாக வான்கடே போட்டிக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இப்போது புனே டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்திருக்கிறது.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் சரிவை சந்தித்திருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் படு மோசமாக இருக்கிறது. கடந்த 8 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 104 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவர். வங்கதேச சீரிஸிலும் ரோகித்தின் பேட்டிங் சிறப்பாக இருக்கவில்லை. இதனால், நியூசி டெஸ்டுக்கு ஒட்டுமொத்த அணியை குறை கூறிய ரோகித் சர்மாவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் முதலில் ஒழுங்காக பேட்டிங் ஆட வேண்டும் என வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.