புதுடெல்லி: எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான பெயர் பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த நடைமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் வருமானத்தை பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா’ திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான தயார் நிலையை மதிப்பிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்துக்கான பெயர் பதிவு தேசிய அளவில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்காக மத்திய அரசால் யூவின் (UWIN) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி உட்பட பிற முக்கிய சுகாதார திட்டங்களையும் பிரதமர் மோடி அன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள். மருத்துவர்களின் அப்பாயின்மென்ட் பெறுவதறகு யூவின் செயலி பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.