நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘கங்குவா’. இந்த பாடல் வெளியீட்டு விழா தற்போது நடந்து வருகிறது. இந்த விழாவில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் காணொலி காட்சி மூலமாக,”அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கின் போதே, எனக்காக வரலாற்றுப் படம் ஒன்றை சிவாவிடம் எழுதச் சொன்னேன். அதைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னார் சிவா. அதன்படி பார்த்தால் ‘கங்குவா’ எனக்காக எழுதப்பட்ட கதைதான். ஒருவேளை இதை ஞானவேல் ராஜாவிடம் கூறும்போது, நன்றாக இருப்பதால் சூர்யாவிற்குப் பண்ணிவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்று பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, “அப்பாவிற்கு மரியாதை கொடுத்து, எங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ரசிகர்களுடைய 27 வருட அன்பிற்கான வாய்ப்பைக் கொடுத்த என்னுடைய அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
ஞானவேல் தாய்வீடு மாதிரி. அவரிடம் இருந்து தான் நிறைய விஷயங்கள் தொடங்கின. கார்த்தி நடிக்க தொடங்கியதற்கு என்னை விட, ஞானவேல் தான் காரணம். என்னுடைய படிக்கட்டு பெரிதாவதற்கும், அடுத்த பாய்ச்சல் பாய்வதற்கும் எப்போதும் ஞானவேல் காரணமாக இருந்துள்ளார்.
எப்போதும் மார்க்கெட்டை விட பெரிதாக செய்வதற்குத் தயாராக இருப்பார். பாபி என்னுடைய உடன்பிறக்காத சகோதரர். அவரை நான் நிறைய சைட் அடித்திருக்கிறேன். அவர் நடித்ததால், இந்தப் படம் பான் இந்தியா படம் ஆகியிருக்கிறது. யோகி பாபு நல்ல அறிவான நடிகர். தமிழ் வளர வேண்டும் என்று நினைத்து மதன் கார்க்கியும், அவரது நண்பர்களும் நிறைய வேலை செய்கின்றனர்.
சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல… அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவா எடுத்து வந்த இந்த பொக்கிஷத்தில் இருக்கும் காட்சிகள் மிகவும் புதியதாக இருக்கும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் போட்டிருக்கிறோம். 107 நாள்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.
இந்த படம் பெரிய தலைவாழை விருந்து. மேலும் மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம். நல்லதே நடக்கும், என் மனசை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன்… மன்னிப்பு ஒரு அழகான விஷயம் – இதை எனக்கு சிவா கற்றுக்கொடுத்தார். அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறுவோம். அதனால், உயர்வோம்.
சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுமாதிரி தான் என்னுடைய ஏற்ற, இறக்கங்களை பார்க்கிறேன். ரசிகர்களுடைய அன்பை என்னுடைய அம்மாவின் அன்பு மாதிரி பார்க்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் என்னுடைய காலேஜ் ஜூனியராக இருந்தாலும் ‘பாஸ்’ என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரை எப்பவுமே எளிதாக அணுகலாம்.
என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் (விஜய்) இருக்கிறார். அவர் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்” என்று பேசி முடித்தார்.