கோவை: நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் பேசினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியில், தென்மண்டல நீதிபதிகளுக்கான இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் பேசும்போது, “வழக்கு விசாரணையிலும், நீதி வழங்குவதிலும் தாமதம் கூடாது என்பதற்காகத்தான் நீதித்துறை அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது. நீதிப் பரிபாலனம் செய்யும் நீதிபதிகள், தங்களது அறிவையும், அனுபவத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கு நீதித் துறையின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. எனவே, நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது நீதித்துறையின் முக்கிய கடமை. இந்தப் பொறுப்பை நிறைவேற்ற, நீதித் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
தேசிய நீதித் துறை அகாடமி இயக்குநர் அனிருத்தா போஸ் பேசும்போது, “இதுபோன்ற மாநாடுகள், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண உதவும். நீதிபதிகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீதித் துறையின் சேவை சமுதாயத்திற்கு மிகவும் தேவை,’’ என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, “நீதித் துறையில் தொழில்நுட்ப மேம்பாடு முக்கிய அம்சமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வாயிலாக, வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும்” என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பேசும்போது, “நீதி தேவைப்படும் பலர் தங்கள் உரிமைகளைப் பற்றி அறியாமல் உள்ளனர். நீதிபதிகள் கணிசமான சவால்களை எதிர்கொள்கின்றனர். வழக்குகள் அதிகமாக இருப்பதால், அதிக பணிச்சுமையை எதிர்கொள்கின்றனர். நீதிபதிகள் விசாரணை அட்டவணையை சமநிலைப்படுத்தும் கடினமான பணியை மேற்கொள்கின்றனர்” என்றார்.
மாநாட்டில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், தமிழ்நாடு மாநில நீதித் துறை அகாடமி இயக்குநர் ஆர்.சத்யா, சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அல்லி மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களைச் சேர்ந்த 150 நீதிபதிகள் பங்கேற்றனர். இந்த மாநாடு இன்று (அக். 27) நிறைவு பெறுகிறது.