நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியது என்ன?

மும்பை,

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது.

இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“இந்தியாவிற்கு விளையாட வருகை தரும் எந்தவொரு அணியும், டெஸ்ட் தொடரை வெல்வது என்பதுதான் அதன் கனவாக இருக்கும். நன்றாக விளையாடிய நியூசிலாந்தும் அதைத்தான் செய்துள்ளது. சிறப்பான ஆல்-ரவுண்ட் குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.