பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் மனைவி பார்வதியிடம் லோக் ஆயுக்தா போலீஸார் நில முறைகேடு வழக்கு தொடர்பாக 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
கர்நாடக முதல்வர் சித்தரா மையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்திய தற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்றுநிலம் ஒதுக்கியது. கையகப்படுத் திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீதுநில முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தாவும் விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் சித்தராமையா முதல் குற்றவாளியாகவும், அவரதுமனைவி பார்வதி 2வது குற்றவாளியாகவும், மூத்த மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இதனிடையே இளைய மைத்துனர் தேவராஜின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். வழக்கு வேகமெடுத்ததை தொடர்ந்து, பார்வதி சம்பந்தப்பட்ட நிலத்தை மைசூரு மாநகர மேம்பாட்டு கழகத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் லோக் ஆயுக்தாபோலீஸார் நேற்று பார்வதியிடம் காலை 9 மணி முதல் மதியம் 12.30வரை விசாரணை நடத்தினர்.
அப்போது நிலம் எவ்வாறு வாங்கப்பட்டது? எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது? கையகப்படுத்தியது எப்படி? மாற்று நிலம் பெற விண்ணப்பித்தது எப்படிஎன்பது உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. லோக் ஆயுக்தா போலீஸார் இவ்வழக்கில் வருகிற டிசம்பர்25ம் தேதிக்குள் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். விரைவில் முதல்வர் சித்தராமையாவையும் போலீஸார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.