அயோத்தியில் 35 லட்சம் அகல் விளக்குகள்: தீபாவளியன்று 7-வது ஆண்டாக உலக சாதனை

உத்தர பிரதேசம் அயோத்தியில் தீபாவளிக்காக 35 லட்சம் விளக்குகளால் தீப ஒளிகள் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம், தொடர்ந்து 7-வது ஆண்டாக உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

வட மாநிலங்களில் ராமர் வன வாசம் முடித்து திரும்பிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் ராமர்கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பிரம்மாண்ட விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. குறிப்பாக உ.பி.யில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக சார்பில் முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

அதன்படி, வரும் தீபாவளி அன்று, அயோத்தியில் 35 லட்சம்அகல் விளக்குகளால் தீப ஒளிகள்ஏற்றப்பட உள்ளன. இவற்றில், 25 லட்சம் விளக்குகள் சரயுநதிக்கரைகளிலும் மற்றவை அயோத்தியின் இதரப் பகுதிகளிலும் ஒளிவிடத் தயாராகின்றன. இந்த எண்ணிக்கையில் உலகளவில் எங்குமே தீபங்கள் ஏற்றப்பட்டதில்லை. எனவே, இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனையாக இடம்பெற உள்ளது.

ஆண்டுதோறும் அதிகரிப்பு: இதுபோல் அயோத்தி உலகசாதனை படைப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன் கடந்த 2018-ல் 3.01 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை அப்போது முதல் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

கடந்த 2019-ல் 4.04 லட்சம், 2020-ல் 6.06 லட்சம், 2021-ல்9.41 லட்சம், 2022-ல் 15.76 லட்சம்மற்றும் 2023-ல் 22.23 லட்சம் விளக்குகள் பிரகாசித்தன. இப்போது 7-வது முறையாக தீபாவளியில் உலக சாதனை நிகழ்த்தப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. சுற்றுலா துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத் கூறும்போது, ‘‘சரயு நதிக்கரையில் முதன்முறையாக மகா ஆரத்தியை 1,100 பேர் காட்டுகிறார்கள். இதற்கான நபர்களை முக்கியயோகிகள் மற்றும் மடாதிபதிகளுடன் ஆலோசித்து தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் உ.பி. ஆளுநர் அனந்தி பென் படேல், முதல்வர் யோகி மற்றும்அவரது அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது’’ என்றார்.

அக்டோபர் 28 முதல் 30 வரை அயோத்தியின் பல்வேறு 30 முக்கிய பகுதிகளில் ராமாயணம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இதில் உள்ளூரை சேர்ந்த சுமார் 250 கலைஞர்களுடன் மலேசியா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற உள்ளனர். இத்துடன் இந்தியாவின் பல் வேறு பழங்குடிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.