புதுடெல்லி: மகாராஷ்டிராவில் தாங்கள் அறிவித்துள்ள 5 வேட்பாளர்களுக்கு மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணி ஒப்புதல் அளிக்காவிட்டால் 25 முதல் 30 சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துவோம் என சமாஜ்வாதி கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.
மொத்தம் 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும்.
இங்கு எம்விஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடுகின்றன. இதன் மொத்த எண்ணிக்கை 255 ஆகும். மேலும் 16 இடங்களை இக்கட்சிகள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. எஞ்சிய 15 இடங்களை இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு பிரித்துக் கொடுக்க உள்ளன.
எம்விஏ கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 12 இடங்களை கேட்டது. ஆனால் தொகுதிப் பங்கீடு தாமதம் ஆவதால் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில சமாஜ்வாதி தலைவர் அபு ஆஸ்மி கூறியதாவது: வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. அடுத்து ஆட்சி அமைக்கப்போவதாக கூறுவோர் கூட்டணிக் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகளை ஒதுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வளவு காலதாமதம் மகா விகாஸ் அகாதியின் பெரிய தவறு. நான் எனது அதிருப்தியை சரத் பவாரிடம் கூறிவிட்டேன். நாங்கள் 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இதனை எம்விஏ அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிடில் 20 முதல் 30 சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துவோம்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் இரண்டு முறை துரோகம் செய்ததால் நான் பயப்படுகிறேன். கடைசி நிமிடம் வரை எங்களை காத்திருக்க வைத்துவிட்டு கடைசியில் எந்த இடமும் தரவில்லை.
ஒவ்வொரு முடிவுக்கும் டெல்லிக்கு செல்வதால் காங்கிரஸ் தோல்வி அடைகிறது. மாநில காங்கிரஸ் தலைவரை ஏன் முடிவெடுக்க அனுமதிக்க கூடாது? இது அவர்கள் செய்யும் பெரிய தவறாகும். சமாஜ்வாதி மாநில தலைவரான நான்தான் இங்கு கட்சிக்கான முடிவுகளை எடுக்கிறேன். இவ்வாறு அபு ஆஸ்மி கூறினார்.