விக்கிரவாண்டி வி.சாலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாட்டு கட்டமைப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து மாற்ற ஏற்பாடுகளெல்லாம் தீவிரமாக நடைபெற்றது.
மாநாடு குறித்த பரபரப்பான செய்திகள் பேசுபொருளாக, இன்று அதிகாலை முதலே மாவட்டந்தோறும் த.வெ.க தொண்டர்கள் ஆரவாரத்துடன் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். சென்னையிலிருந்து வரும் மக்கள் கூட்டத்தைவிட, தென் தமிழகத்திலிருந்து வரும் கூட்டம் பெருமளவிருக்கிறது. மாநாடு நடக்கும் வி.சாலை பகுதியிலிருந்து 6 கிலோமீட்டர் வரையில் மக்கள் நெடுஞ்சாலையோரம் வரிசைக் கட்டி நிற்கின்றனர். 6 கிலோமீட்டரைக் கடப்பதற்கு 2 மணிநேரமாகிவிடுகிறது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முதல் 6 கிலோமீட்டருக்கு வாகனங்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. மாநாட்டு அரங்கிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணமிருக்கிறது. மாநாட்டு அரங்கு கூடுதலாக விரிவாக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் ஏரியாவும் 12 ஏக்கர்கள்வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கணக்கிட்டதைவிடவும் மிகவும் அதிகமான மக்கள் கூட்டம் வந்துள்ளதால் தண்ணீர் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. கட்டுங்காத நிலைமையை உணர்ந்த த.வெ.க நிர்வாகிகள் தண்ணீர், உணவுக்கான ஏற்பாட்டை அதிகப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூடுதலாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து வாட்டி வருகிறது.
இப்படியான நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு மாநாட்டை முன்கூட்டியே 3 மணிக்கெல்லாம் தொடங்கி, முடிந்த அளவிற்கு விரைந்து முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த பெரும் மக்கள் கூட்டம் மாநாட்டிற்கு வருவதைவிடவும் வெளியேறுவதே பெரும் சவாலான விஷயம்.
எந்தவித அசாம்பாவிதமுமின்றி மக்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்புவதுதான் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. மாநாட்டை விரைவில் ஆரம்பித்து, விரைவில் முடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.