கும்பகோணம்: தான் படித்த பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்கியதை அறிந்த எம்எல்ஏ, சொந்த செலவில் மண் நிரப்பிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.
கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட நால்ரோடு அருகில் அரசு உதவி பெறும் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், மேலும், அந்த பள்ளி வளாகத்திலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர் தங்கி படிக்கும் வகையில் விடுதி இயங்கி வருகின்றது.
இந்த நிலையில், கும்பகோணத்தில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகின்றது. இதனால், அந்தப் பள்ளியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் விடுதி மாணவர்கள், தேங்கி உள்ள மழை நீரில் நடந்து சென்று வந்தனர்.
இதனையறிந்த மாணவர்கள், ஆசிரியர்கள், இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், கும்பகோணம் எம்எல்ஏவிடம் மைதானத்தின் நிலை குறித்து கூறி, மண் நிரப்ப வலியுறுத்த முடிவு செய்து, கடந்த 25-ம் தேதி அவரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். பின்னர், அந்த மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்ட போது, அங்குள்ள மாணவர்கள், விளையாடுவதற்கும், வகுப்பறை மற்றும் விடுதிக்கு செல்ல முடியவில்லை என்றனர்.
தொடர்ந்து, தான் படித்து பள்ளி மாணவர்களுக்கு, சிரமம் ஏற்பட்டதால், அங்கிருந்த மாணவர்களிடம், உடனடியாக தேங்கி உள்ள பகுதிகளில் மண் நிரப்பப்படும் என உறுதியளித்தார். அதன் பேரில், சுமார் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட மண்ணை, அந்த மைதானத்தில் கொட்டப்பட்டது. தொடர்ந்து, மண் தள்ளும் இயந்திரம் மூலம், மைதானம் மூழுவதும் மண் நிரப்பும் பணி நடைபெற்றது.
இந்தக் கோரிக்கை விடுத்து மாணவர்களுடன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், தானும் மாணவனாக மாறி, உற்சாகமாக நேரில் பார்வையிட்டு மண் நிரப்பவேண்டிய பகுதிகளை சுட்டிக்காட்டி, மண் நிரப்ப பணியில் அவர்களுடன் ஈடுபட்டார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியதின் பேரில், கோரிக்கையை நிறைவேற்றிய அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் கூறியது, மைதானத்தில் மழை நீர் தேங்கியதால், வகுப்பறை, விடுதிக்கு செல்ல, தேங்கி உள்ள மழை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு பல்வேறு உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்தப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வலியுறுத்தியதின் பேரில், உடனடியாக சுமார் 50 லாரி மண்ணை கொட்டி, நிரப்பும் பணி நடைபெற்றது. தற்போது முதற்கட்டமாக மழை நீர் தேங்காதவாறு மண் நிரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைவில் சாலை உயரத்திற்கு மைதானத்தின் உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.