புதுடெல்லி: பிரபல இசைக்கச்சேரிகளின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது, போலி டிக்கெட்டுகளின் விற்பனை போன்றவற்றை தடுப்பதற்காக டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகர் மற்றும் பெங்களூரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
டெல்லியில் நேற்று பாடகர் தில்ஜித் டொசான்ஜ் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதேபோல் லண்டனைச் சேர்ந்த ‘கோல்ட்ப்ளே’ ராக் இசைக் குழுவின் கச்சேரி மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இவற்றின் டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி டிக்கெட் விற்பனையும் நடைபெறுவதாக பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த நிதி முறைகேடுகளை தடுக்க டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் பெங்களூர், சண்டிகர் என 5 மாநிலங்களில் உள்ள 13 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
இதில் இசைக் கச்சேரிகளின் டிக்கெட்டுகள் சட்டவிரோத விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் தனி நபர்கள் பலர் போலி டிக்கெட்டுகளை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.