சென்னை: “கொள்கை எதிரி என்று சொல்லி ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் விஜய். பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தவில்லை. வளர்ச்சியைத்தான் கொண்டு வருகிறது” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. விஜய்யின் கட்சிக்கு எனது வாழ்த்துகளை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். சில நிகழ்வுகள் நடந்ததற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் உதாரணத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியது, பேசுவதற்கு முன்னால் தாய் தந்தையரை வணங்கியது, அடையாளத்தை உறுதிப்படுத்தியது பதநீரை மாநில பானமாக அறிவிப்பேன் என்று சொன்னது, தாக்குதல் அரசியல் இல்லாமல் ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பேன் என்று சொன்னது பாராட்டுக்குரியது.
இன்று தனது அரசியல் எதிரி என்று திமுகவை அடையாளப்படுத்தியது வரவேற்கத்தக்கது. ஊழலை கடுமையாக எதிர்ப்பேன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்திற்கு ஆபத்து என துணிச்சலாக பிரகடனப்படுத்தியது மக்களிடம் மனமாற்றத்தை எதிர்ப்படுத்தும். கொள்கை எதிரி என்று சொல்லி ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தவில்லை. வளர்ச்சியைத்தான் கொண்டு வருகிறன்றனர். அவர் பாஜகவைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் உங்கள் கொள்கை எதிரி அல்ல என்று அவரிடம் எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.
மதச்சார்பின்மை பற்றி விஜய் பேசுகிறார். இன்று ஏராளமான சிறுபான்மையினர் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ஆளுநரை நீக்க வேண்டும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மாநிலத்திற்கு நல்லது செய்த கவர்னர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்கரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளது இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல. திராவிடம் மாடல் என்று மக்களை ஏமாற்றுவதாக அவர் சொல்வது அவர் கடுமையாக திராவிட முன்னேற்ற கழக எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்கிறார் என்று தெரிகிறது.
இரு மொழிக் கொள்கை என்று சொல்லிவிட்டு உங்கள் படங்களை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுகிறீர்கள். அதே போல ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வோம் என்று சொல்கிறார். இது ஆரோக்கியமான அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன்.” இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் இன்று (அக்.27) மாலை நடைபெற்றது. இதில் பேசிய விஜய், “அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு எதிரிகளை அடிபணிய வைக்கும் கூட்டம் அல்ல. ஏ டீம், பி டீம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வீழ்த்த முடியாது. உலகம் முழுவதும் நம் வகையறா உள்ளனர். நம் எதிரிகளை ஜனநாயக ரீதியில் 2026-ம் ஆண்டு தேர்தலில் ஒற்றை விரலில் அழுத்தும் வாக்குகள் அணுகுண்டாக விழும். யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அவர்கள் மேல் பூசி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுவிட்டு, பாசிசம் பாசிசம் என்று கூறுகிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் யார். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறார்கள்.
எங்கள் கட்சி வண்ணத்தை தவிர வேறு வண்ணத்தை பூச முடியாது. திராவிட மாடல் என கூறி கொள்ளை அடிக்கும் கூட்டம் நம் எதிரி. திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவதில்லை. மதசார்ப்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிருத்தி செயல்பட உள்ளோம்” என்று தெரிவித்தார்.