மும்பை: “எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் இருவரை தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்காக அஜித் பவார் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன” என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் பாஜக – ஏக்நாத் ஷிண்டே தலைமையினா சிவ சேனா – அஜித் பவார் தலைவர் என்சிபி கூட்டணி ஆட்சியில் உள்ளது.
எதிரணியில் காங்கிரஸ் – சரத் பவார் தலைமையிலான என்சிபி – உத்தவ் தாக்கரே தலைமையினான சிவ சேனா கூட்டணி களமிறங்குகிறது. கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் 48 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்ட நிலையில், நேற்று 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் வெளியானது.
இந்நிலையில், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க அஜித் பவார் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அஜித் பவார் எங்கள் கட்சி எம்எல்ஏக்களை தன் கட்சியில் சேர்ப்பதற்காக பேரம் பேசியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் ஆகும். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏன் அமைதியாக இருக்கிறார். மக்களுக்கு உண்மையை சொல்லும் பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.