'இந்தியா தற்சார்புடன் அனைத்து துறைகளிலும் அற்புதம் நிகழ்த்தி வருகிறது' – பிரதமர் மோடி

புதுடெல்லி,

பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் ரேடியோ மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“தற்சார்பு என்பது நமது கொள்கை மட்டுமல்ல, அது நமது பேரார்வமாக மாறிவிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்பங்களை நம்மால் உருவாக்க முடியும் என்று யாராவது கூறியிருந்தால் பலர் அதை நம்பியிருக்க மாட்டார்கள். அப்படி சொல்பவர்களை கேலி செய்திருப்பார்கள்.

ஆனால் அவ்வாறு கேலி செய்தவர்கள் இன்று இந்தியாவின் வெற்றியைக் கண்டு ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். இந்தியா இன்று தற்சார்புடன் செயல்பட்டு அனைத்து துறைகளிலும் அற்புதம் நிகழ்த்தி வருகிறது. தற்சார்பு இந்தியா என்பது தற்போது மிகப்பெரிய இயக்கமாக மாறி இருக்கிறது.

லடாக்கில் உள்ள ஹான்லே பகுதியில் இந்த மாதம் ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கியை(MACE) திறந்து வைத்தோம். அந்த தொலைநோக்கி தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழ் இருக்கும். ஆக்சிஜன் கூட அங்கு குறைவாக இருக்கும். ஆசியாவில் வேறு எந்த நாடும் செய்யாத சாதனையை நமது விஞ்ஞானிகள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் உள்ளூர் வியாபாரிகளுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். நமது நாட்டை தற்சார்பு கொண்ட நாடாக மட்டுமின்றி, சர்வதேச அளவில் புதுமைகளின் உறைவிடமாக மாற்ற வேண்டியது நமது கடமையாகும்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.