மும்முனை போட்டி
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரே ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமித் தாக்கரே மும்பையில் உள்ள மாகிம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பாக இத்தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சார்பாக அக்கட்சி எம்.எல்.ஏ.சதா சர்வான்கர் போட்டியிட இருக்கிறார்.
இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் இத்தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் இத்தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.சதா சர்வான்கரை போட்டியில் இருந்து விலகும்படி ராஜ்தாக்கரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் அறிவிக்கப்படும் முன்பு பல முறை ஏக்நாத் ஷிண்டேயை அவரது அரசு இல்லத்தில் ராஜ்தாக்கரே சந்தித்து பேசினார்.
இதையடுத்து சிவசேனா(ஷிண்டே) வின் அமைச்சர் தீபக் கேசர்கர் எம்.எல்.ஏ.சதா சர்வான்கரை சந்தித்து போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
சதா சர்வான்கர் உறுதி!
இப்பிரச்னை குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதய் சாவந்த் கூறுகையில், ”இது பெரிய பிரச்னை. மாகிம் தொகுதிக்கான வேட்பாளரை முதல்வர் ஷிண்டேயும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும்தான் முடிவு செய்யவேண்டும். சதா சர்வான்கருக்கு சீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டோம். நெருக்கடியான நேரத்தில் எங்களுடன் சதா சர்வான்கர் இருந்தார். எனவே அவர் போட்டியில் இருந்து விலகும்படி கூறுவது சரியாக இருக்காது”என்றார். பா.ஜ.க தலைவர்களிடமும் ராஜ்தாக்கரே பேசி ஷிண்டேவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
ஆனால் சதா சர்வான்கர் தான் போட்டியில் இருந்து விலக மாட்டேன் என்றும், பின்வாசல் வழியாக சட்டமன்றத்திற்கு செல்லமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். போட்டியில் இருந்து விலகினால் சட்டமேலவை உறுப்பினராக்குவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஆனால் தான் முதல்வர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தான் ஒரு போராளி என்பதால் தேர்தலில் போட்டியிட்டே சட்டமன்றத்திற்கு செல்வேன் என்றும் சதா சர்வான்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சதா சர்வான்கர் மகன் சமாதான் சர்வான்கர் கூறுகையில்,”ராஜ்தாக்கரே பெரிய தலைவர் என்பதாலும், அமித் தாக்கரே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அனைத்து பக்கத்தில் இருந்தும் நெருக்கடி வருகிறது. நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். முதல்வர் 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக இருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ராஜ்தாக்கரே நெருக்கடி!
இது குறித்து கருத்து தெரிவித்த மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலார் கூறுகையில்,”ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே நமது குடும்பத்தில் ஒருவர். எனவே அவருக்கு மஹாயுதி கூட்டணி ஆதரவு கொடுத்து தேர்தலில் வெற்றி பெறச்செய்யவேண்டும். முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கும்படி தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விவகாரத்தில் மஹாயுதி கூட்டத்தில் கருத்து வேறுபாடு இல்லை. சதா சர்வான்கர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. அமித் தாக்கரே முதல் முறையாக போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு கொடுத்து அவரை வெற்றி பெறச்செய்யவேண்டும்” என்றார்.
அதோடு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடும் கோப்ரி தொகுதியில் நவநிர்மாண் சேனா இது வரை வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதோடு மும்பை சிவ்ரி தொகுதியில் நவநிர்மாண் சேனாவின் மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் போட்டியிடுகிறார். எனவே அத்தொகுதியில் சிவசேனா (ஷிண்டே) இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. நவநிர்மாண் சேனாவின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் ஏக்நாத் ஷிண்டே வேட்பாளர்களை நிறுத்தாமல் தவிர்த்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் ராஜ் தாக்கரே இது வரை 78 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb